Show all

ஞாயிறு விடுமுறையை தொழிலாளர்கள் நேற்று வங்கிகளிலேயே தொலைத்தனர்

திருப்பூர்: மாவட்டம் முழுவதும், தொழிலாளர்கள் நேற்று அதிகளவு பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தினர். ஒரே நாளில், 150 கோடி ரூபாய் வரை பழைய ரூபாய் நோட்டுகள் பரிமாற்றம் செய்யப்பட்டதாக, வங்கியாளர்கள் தெரிவித்தனர். கறுப்பு பணத்தை ஒழிக்க என, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று, நடுவண் அரசு அறிவித்து, புதிய, 500 மற்றும், 2,000 ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்துள்ளது. கடந்த, 9ம் தேதி முதல், பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து, புதிய நோட்டுகளாக மாற்றி, வருகின்றனர். வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து, தங்களது வங்கி கணக்கில் வைப்புசெய்து வருகின்றனர். படிவம் நிறைவு செய்து கொடுத்து, 10 ஆயிரம் ரூபாய் வரை பெற்றுக் கொள்கின்றனர். கையிருப்பு நோட்டுகளை மாற்ற, படிவத்தை பூர்த்தி செய்து, தகுந்த ஆதாரத்துடன் கொடுத்து, 4,000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்கின்றனர். அதில், 2,000 ரூபாய் நோட்டுகள், மட்டும் வழங்கப்படுகிறது. அறிவிப்பு வெளியாகி ஆறு நாட்களாகியும், புதிய, 500 ரூபாய் நோட்டுகள் வந்து சேரவில்லை. கைவசமுள்ள, 2,000 மற்றும், 100 ரூபாய் மூலம் வங்கிகள் இயங்கி வருகின்றன. காலியாகும் ஏ.டி.எம்.,கடந்த இரண்டு நாட்களாக, ஏ.டி.எம்.,கள் இயங்கினாலும், 100 ரூபாய் மட்டும் வைக்கப்படுவதால், அடிக்கடி ரூபாய் நோட்டு காலியாகி, மறுபடியும் வைப்பு செய்வார்களாக என்று மக்கள் காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. ஒரு நபர், 2,000 ரூபாய் மட்டும் எடுக்க முடியும் என்றாலும், அனைவரும் பணம் எடுப்பதால், ஏ.டி.எம்., கள் மூடப்படுகின்றன. நேற்று காலை, 8:00 மணி முதல், தொழிலாளர்கள் வங்கி வாசலில் நிற்க துவங்கினர். பல மணி நேரம் காத்திருந்து, தங்களது பணத்தை வைப்பு செய்து, 4,000 ரூபாயை பெற்று கொண்டனர். தங்களது விடுமுறை நாள் முழுவதும், வங்கி வாசலிலேயே கழிந்தது. நீண்ட நேரம் வரிசையில் நின்றதால், தேநீர், காபி, சமோசா விற்பவர்கள், தற்காலிக கடை அமைத்து விற்றனர். நான்கு நாட்களில் இல்லாத அளவுக்கு, நேற்று கூட்டம் அதிகமாக இருந்தது. மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரமூர்த்தி கூறுகையில், இதுவரை இல்லாத அளவுக்கு, நேற்று அனைத்து வங்கிகளிலும் கூட்டம் அலைமோதியது. நான்கு நாட்களில், 150 கோடி ரூபாய் வரை, பழைய நோட்டுகள் மாற்றப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில், 130 முதல், 150 கோடி ரூபாய் அளவுக்கு பழைய ரூபாய் நோட்டு மாற்றப்பட்டிருக்கும். வங்கி கணக்கு வைப்புத் தொகையும், 160 கோடியை தாண்டியிருக்கும். ஏ.டி.எம்., களில் அடிக்கடி ரூபாய் தீர்ந்துவிடுகிறது. என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.