Show all

கீழடியில் ஆய்வுகளைத் தொடர தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யத் தயார்

கீழடியில் ஆய்வுகளைத் தொடர தமிழக அரசு சார்பில் உதவிகள் செய்யத் தயார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் மத்திய தொல்லியல்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் அகழாய்வுப் பணிகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் திங்கள்கிழமை நேரில் பார்வையிட்டார். அகழாய்வு செய்யப்பட்ட இடத்தையும், அங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்களையும் பார்வையிட்ட அவர் அதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழர் நாகரிகத்தை நிரூபிக்க கீழடி ஆய்வுகள் உதவி செய்யும். இங்கு இதுவரை கண்டெடுக்கப்பட்டுள்ள 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் மூலம் ரோம் உள்ளிட்ட புராதன நகரங்களுடன் தமிழர்கள் வணிகம் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. கீழடியில் மத்திய தொல்லியல்துறை அதன் பணிகளைத் தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு தமிழக அரசு சார்பில் தேவைப்படும் அனைத்து உதவிகளும் செய்யப்படும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தை கண்டறிய கார்பன் டேட்டிங் சோதனையை மத்திய தொல்லியல்துறை விரைவில் மேற்கொள்ள வேண்டும். இதற்காக மத்திய தொல்லியல்துறை இயக்குநரை விரைவில் சந்திக்க உள்ளேன். ஆய்வுப் பொருள்களை சோதனைகளுக்காக வெளியூர் எடுத்துச் செல்லக் கூடாது என்று சில சமூக ஆர்வலர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இதனால் பணிகளை நிறைவு செய்வதில் காலதாமதம் ஏற்படும். எனவே வழக்கு தொடர்ந்த சமூக ஆர்வலர்களிடம் பேசியுள்ளோம். விரைவில் நல்ல தீர்வு எட்டப்படும் என்றார். ஆய்வுப் பணிகள் குறித்து தொல்லியல்துறையின் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணா கூறியது: தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணிகளிலேயே முக்கியமானது கீழடி. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் தங்களுக்கே உரித்தான நாகரித்துடன் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தற்போது வரை அனைத்து பொருள்களுக்கும் தோராயமான காலத்தை தான் குறித்துள்ளோம். கார்பன் டேட்டிங் சோதனை உள்ளிட்ட அறிவியல் சோதனைகள் முடிந்த பின்னரே முறையான காலத்தை கணக்கிட முடியும். 110 ஏக்கர் பரப்பளவில் பழங்கால கட்டுமானங்கள் இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 2 சதவீத பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும் 9 ஆண்டுகள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டால் மட்டுமே முழுமையாக நிறைவடையும். தமிழகத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் மக்கள் குழுக்களாக வாழ்ந்ததை நிரூபிக்கும் சான்றுகள் கிடைத்துள்ளன. ஆனால், தமிழர் நாகரீகத்துக்கான சான்றுகள் இதுவரை கிடைக்க வில்லை. கீழடி ஆய்வின் மூலம் அதற்கு ஒரு நிரந்தர தீர்வு பிறக்கும். கார்பன் டேட்டிங் சோதனைகளை மேற்கொள்ள பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட இடங்களுக்கு அகழாய்வு பொருள்களை எடுத்துச் செல்ல உள்ளோம். இதுவரை 2 கட்ட ஆய்வுகள் முடிந்துள்ளன. மூன்றாம் கட்ட ஆய்வுகள் 2017 ஜனவரி முதல் செப்டம்பர் வரை நடைபெறும். தொல்லியல்துறை இயக்குநரின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் என்றார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி, உதவி தொல்லியலாளர்கள் எம்.ராஜேஷ், எம்.வீரராகவன், எழுத்தாளர் சு.வெங்கடேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.