Show all

அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்! குறையை சுட்டிக்காட்டியிருந்த ஜோதிகா- நிறையை முன்னெடுக்க

கடந்த சில மாதங்களுக்கு முன்பு குறைபாட்டை நேரில் கண்ட நிலையில், தற்போது நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.

25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக் காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.

தமிழக நலங்கு மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள் தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.

ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க நலங்குத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். “ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்று ஜோதிகாவின் கொடையுள்ளத்தைப் பாராட்டினார் விஜயபாஸ்கர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.