Show all

இப்பூவுலகை விட்டுப் புறப்பட்டு விட்டார் ஜெயலலிதா

பச்சைப் பட்டு சேலை அணிந்து மெரீனா கடற்கரையில் மீளாத் துயில் கொண்ட தங்கத்தாரகை முதல்வர் ஜெயலலிதா இப்பூவுலகத்தைப் விட்டு புறப்பட்டு விட்டார். வேதா நிலையத்தில் பட்டுமெத்தையில் படுத்துறங்கிய அவர், மெரீனா கடற்கரையில் சந்தனப் பேழையில் மீளாத் துயில் கொண்டுள்ளார். தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்த முதல்வர் ஜெயலலிதா மண்ணுலகத்தை விட்டு விண்ணுலகம் சென்று விட்டார். போயஸ் தோட்டத்தை விட்டு ஜெயலலிதா புறப்படுகிறார் என்றாலே அவரை தரிசிக்க ஆங்காங்கே நின்று கொண்டு இருப்பார்கள். தெய்வத்தைக் கண்ட பக்தர்களைப் போல வணங்குவார்கள். ஒரு நொடி தரிசித்தால் போதும் ஓராண்டுக்கு மகிழ்ச்சி கிடைக்கும் இன்றைக்கு ஜெயலலிதாவின் இறுதி யாத்திரையின் போதும் அலைகடலென திரண்டு கொண்டிருந்த மக்கள் கண்ணீர் மல்க மலர்கள் தூவி பிரியா விடை கொடுத்து அனுப்பினர். ஜெயலலிதாவின் கார்கள் மீது தொண்டர்கள் தூவும் மலர்கள் நிரம்பி வழியும். இன்றும் அப்படித்தான் வழியெங்கும் மக்கள் மலர்கள் தூவி வழியனுப்பி வைத்தனர். பெற்றால்தான் பிள்ளையா நாங்கள் இருக்கிறோம் அம்மா என்று கோடிக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செலுத்தினர். பச்சை நிற புடவை, பச்சைக்கல் மோதிரம், நெற்றியில் சின்னதாய் ஒரு மெருன் நிற பொட்டு, லேசாய் இழுத்து விடப்பட்ட நாமம். இறுதி துயில் கொள்ளும் போதும் அதே பச்சை நிற பட்டுப்புடவை உடுத்தி புன்னகை பூத்த முகத்துடன், மெரீனா கடற்கரையில் சந்தன பேழைக்குள் பட்டுத்தலையணையில் படுத்துறங்குகிறார் ஜெயலலிதா. 75 நாட்களுக்கு முன்புவரை போயஸ் தோட்டத்து பட்டு மெத்தையில் துயில் கொண்ட ஜெயலலிதா, செப்டம்பர் 22ம் தேதி கடைசியாக போயஸ் தோட்டத்தை விட்டு கிளம்பினார். நேற்று வரை அப்பல்லோவில் 2008ம் எண் அறையில் மருத்துவமனையில் படுக்கையில் உறங்கியவர் இன்று முதல் மெரீனா கடற்கரையில் சந்தனபேழையில் தன் அரசியல் ஆசான் நினைவிடத்தின் அருகில் மீளாத் துயில் கொண்டு விட்டார். ஜெயலலிதா இந்த மண்ணுலகத்தை விட்டு மறைந்தாலும் அவரது புகழ் மறையாது என்பது நிச்சயம்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.