Show all

ஜெ. வீடு திரும்புவது இனி அவர் கையில்! - அப்போலோவின் தலைவர் பிரதாப் ரெட்டி

செப்டம்பர் மாதத்தின் ஒரு நள்ளிரவில், திடீரென்று அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார் ஜெயலலிதா. அவருக்கு என்ன நோய்... எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள். என்னமாதிரியான சிகிச்சை தரப்படுகிறது? உள்ளிட்ட அனைத்துமே கேள்விக்குறியாக இருந்த நிலையில் அவரின் உடல்நிலை பற்றி படிநிலை அறிக்கைகளாக வெளியிட்டு வந்தது அப்போலோ. தொடக்கத்தில் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டார் எனக் கூறப்பட்டாலும், இங்கிலாந்து டாக்டர் அப்போலோவிற்கு வருகை தந்தது, டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களின் வருகை, சிங்கப்பூர் டாக்டர்கள் வந்துபோனது என அனைத்துமே ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பின. வெறும் காய்ச்சலுக்காக நிபுணத்துவம் பெற்ற பல்வேறு மருத்துவர்கள் எதற்கு? என்ற கேள்வி எழுந்தது. முதல்வருக்கு என்ன நோய் என்பதை அப்போலோ தெளிவுபடுத்தவில்லை. ஆனால், என்ன மாதிரியான சிகிச்சைகள் தரப்படுகின்றன என்பதை மட்டும் அப்போலோ தன் அறிக்கைகள் மூலம், அவ்வப்போது தெரிவித்து வந்தது. ஒவ்வோர் அறிக்கையும் அப்போலோவின் முதன்மைச் செயல்பாட்டு அதிகாரியின் கையொப்பமிட்டு வெளிவந்தது. ஆனால், கடைசியாக வெளியிடப்பட்ட அறிக்கை, தலைமை மருத்துவ இயக்குநர் கையொப்பம் இட்டிருந்தார். இந்த நிலையில் ஜெயலலிதா குணமடைந்து வருகிறார் என்று அப்போலோ மருத்துவ வட்டாரங்களே அதிகாரப்பூர்வமற்ற செய்திகளாக வெளியிட்டு வந்தன. இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக, அப்போலோவின் தலைவர் பிரதாப் ரெட்டியே முதல்வர் பூரணமாக குணமடைந்துவிட்டார் எனத் தெரிவித்திருக்கிறார். அப்போலோவின் மருத்துவக் கையேடு புத்தகத்தை நேற்று வெளியிட்டுப் பேசிய அவர் முதல்வர் உடல்நலம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு எவ்வித தயக்கமோ தடங்கலோ இல்லாமல் பதிலளித்தார். அப்போது பேசுகையில், ‘முதல்வர் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதைத் தெளிவாக உணர்ந்திருக்கிறார். இனிமேல் எப்போது மருத்துவமனையிலிருந்து செல்வார் என்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் அவருக்கு, அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும் அவர் மிகவும் திருப்திகரமாக உணருகிறார். இதில் மருத்துவர்கள் மட்டுமல்லாமல் செவிலியர்கள் தொடங்கி பணியாட்கள் வரை அனைவரது பங்குமே குறிப்பிடத்தக்கது. முக்கியமாக இங்கிலாந்து மருத்துவர்கள், டெல்லி மருத்துவர்கள் என அனைவருமே தங்களது முழு உழைப்பையும் அவரது சிகிச்சைக்காக அர்பணித்திருக்கிறார்கள். அவருக்கு அளித்து வரும் மொத்த சிகிச்சை முறையிலும் மிக முக்கியமான சிகிச்சை ஒன்று வெற்றிகரமாக முடிந்துள்ளது. சொல்லப்போனால் உலகின் தலைசிறந்த சிகிச்சைமுறைகள் அனைத்தும் அவருக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. கூடவே கோடிக்கணக்கான மக்களின் பிரார்த்தனையும் சேர்ந்து பயனளித்திருக்கிறது. அவர் விரைவிலேயே உங்களை எல்லாம் வந்து சந்திப்பார்’ என்றார். முதல்வர் எப்போது மருத்துவமனையிலிருந்து வீடுதிரும்புவார்? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், அவருடைய இயல்பு உங்கள் அனைவருக்குமே நன்றாகத் தெரியும். அவர் தன் உடல்நிலையை நல்ல முறையில் புரிந்துகொண்டுள்ளார். விரைவிலேயே ‘நான் எப்போது வீடு திரும்பலாம்?’ என்று அவர் என்னிடம் கேட்பார் என எதிர்பார்க்கிறேன். சாதாரண மருத்துவ வார்டுக்குச் செல்வதாகட்டும் அல்லது தன் வீட்டிற்குத் திரும்புவதாகட்டும். இனி எந்த முடிவும் அவர் கையில்தான் இருக்கிறது. விரைவில் ஆட்சிப் பொறுப்பையும் ஏற்பார். என்று சிரித்தபடியே பதிலளித்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.