Show all

எழும்பூர் அரசு பள்ளி வளாகத்தில் மணல் வெளியே பொங்கி வருவதைப் பார்த்து அதிர்ச்சி

மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணியின் போது ரசாயன கலவை கலந்த மண் எழும்பூர் அரசு பள்ளி வளாகத்தில் வெளியே வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு அருகே டாக்டர் அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 15 மாணவிகள் உள்பட 107 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

நேற்று காலை பள்ளிக்கு வந்த ஆங்கில பாட ஆசிரியர் ஒருவர் மாணவிகள் கழிவறையில் இருந்து மணல் வெளியே பொங்கி வருவதை பார்த்து அதிர்ச்சியடைந்து, இதுகுறித்து தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்.

அவர் உடனடியாக பள்ளிக்கூடத்துக்கு வந்து பார்த்து, இதுதொடர்பாக கல்வித்துறை, காவல் நிலையம், பொதுப்பணித்துறை, மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தார்.

தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த மெட்ரோ ரெயில் அதிகாரிகள் சுரங்கப்பாதை பணிகள் பள்ளி கட்டிடத்தின் கீழே நடைபெற்று கொண்டு இருக்கிறது. அதில் இருந்து ரசாயன கலவை கலந்த மண் வெளியேறியுள்ளது. நீங்கள் பயப்பட வேண்டாம் நாங்கள் அதை உடனடியாக சரிசெய்து விடுகிறோம் என்று தலைமை ஆசிரியரிடம் தெரிவித்தனர்.

அதிகாரிகள் கூறியபடி, மெட்ரோ ரெயில் நிறுவன ஊழியர்களை உடனே அழைத்து வந்து வெளியே பொங்கி வந்த ரசாயன கலவை கலந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் இறங்கினார்கள். கீழே இருந்து வெளியே வந்த மண் கழிவறை முழுவதும் சுமார் 6 அடி உயரத்துக்கு நிரம்பி, பின்னர் ஜன்னல் வழியாக கட்டிடத்துக்கு வெளியே வந்துள்ளது

கழிவறையின் கதவை திறந்ததும், உள்ளே இருந்த மணல் மடைதிறந்த வௌ;ளம் போல், வளாகம் முழுவதும் பரவிவிட்டது. மெட்ரோ ரெயில் நிறுவன ஊழியர்கள் முழுவீச்சில் இந்த பணிகளில் ஈடுபட்டு வளாகம் முழுவதும் பரவி கிடந்த மணலை எடுத்து சென்றனர்.

இந்தச் சம்பவம் பள்ளி மாணவ-மாணவிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து டாக்டர் அம்பேத்கர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்மணி நிருபர்களிடம் கூறியதாவது:

பள்ளியில் பணிபுரியும் ஆங்கில பாட ஆசிரியர் காலை 6.50 மணிக்கு எனக்கு தகவல் கொடுத்தார். நான் 7.10 மணிக்கு பள்ளி வளாகத்தில் வந்து பார்த்து திகைத்து போனேன். ஹாலிவுட் படத்தில் வருவது போல் மணல் பொங்கி வெளியே வந்து கொண்டு இருந்தது. வெளியே வந்த மணல் வௌ;ளி தூளை தூவிய மாதிரி இருந்தது.

இதையடுத்து, நான் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைக்கும் தகவல் கொடுத்தேன். மெட்ரோ ரெயில் பணியினால் தான் இந்த மண் வெளியேறி இருக்கும் என்ற எண்ணத்தில் மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தேன். அவர்களும் வந்து பார்த்து, எங்களுடைய பணியின் போது தான் இந்த பிரச்சினை நடந்து இருக்கிறது என்று கூறினார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்தப் பிரச்சினையை உடனே சரிசெய்து தருவதாகவும், இதனால் கழிவறையில் ஏற்பட்ட அனைத்து செலவுகளையும் தாங்களே பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தனர்.

பள்ளிக்கட்டிடத்தில் சுரங்கப்பாதை அமைப்பதால் வேறு எதுவும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கிறதா? கட்டிடத்தில் விரிசல் காணப்படுகிறதா? என்பதையும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் பார்த்துவிட்டு சென்றுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையில், மத்திய சென்னை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.விஜயகுமார், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அனிதா மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என ஏராளமான அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.

அரசு பள்ளிகளில் உள்ள கட்டிடத்தை மேற்பார்வையிடும் பொறியாளர்களும் கட்டிடத்தின் உறுதியை ஆய்வு செய்தனர். பின்னர், அதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘ரசாயன கலவை கலந்த மண் வெளியேறி இருந்தாலும், கழிவறையின் கட்டிடத்தில் எந்த வித பாதிப்பும் இல்லை. நன்றாகவே இருக்கிறது. மற்ற கட்டிடத்தையும் சென்று ஆய்வு செய்தோம். அதிலும் எந்தவித பாதிப்பும் இல்லை’ என்றனர்.

சம்பவம் நடந்தது குறித்து, பத்திரிகையாளர்களுக்கு தாமதமாகவே தகவல் கிடைத்தது. சம்பவம் நடந்த இடத்துக்கு பத்திரிகையாளர்கள் வருவதை அறிந்ததும், மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர்.

பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் பள்ளி வளாகத்தை வந்து பார்வையிட்டனர். அவர்களிடம் நிருபர்கள் இதுகுறித்து கேட்டனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

இந்தப் பள்ளிக்கட்டிடத்தின் கீழே சுமார் 50 அடி ஆழத்தில் சென்னை எழும்பூர்-சென்டிரல் இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. சுரங்கப்பாதை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் உலோகத்தில் அதிக அழுத்தத்துடன் ‘பென்டோனைட்’ என்ற ரசாயன கலவை உபயோகப்படுத்தப்படுகிறது.

அப்படி அந்த பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது, ஏதோ ஒரு இடத்தில் இடைவெளி ஏற்பட்டு, அதன் வழியாக மாணவிகளின் கழிவறையில் ரசாயன கலவை கலந்த மண் பீறிட்டு வெளியே வந்து இருக்கிறது.

கழிவறையின் உள்ளே இருக்கும் மண்ணை வெளியேற்றிய பிறகு, எந்த இடத்தில் இருந்து பொங்கி வந்தது என்பதை பார்த்து அதை சரிசெய்து, கழிவறையை பயன்பாட்டுக்கு ஏற்றவாறு அமைத்து கொடுக்க இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.