Show all

தற்கொலைக்கான எந்த அடையாளமும் இல்லாத மரணம்! டெல்லியில் தனியார் இஅப பயிற்சி மையத்தில் படித்து வந்த, தமிழக மாணவி

11,ஐப்பசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: டெல்லியில் தனியார் இந்திய ஆட்சிப் பணித்துறை தேர்வுக்கான பயிற்சி மையத்தில் படித்து வந்த, தமிழகத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப் படுகிற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகா ஆலம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தங்கராஜ் - மகாதேவி குடும்பத்தார் இவர்களுடைய மகளான சிரீமதி, டெல்லியில் உள்ள வஜ்ரா இஅப அகாடமியில், கடந்த 6 மாதங்களாக இந்திய ஆட்சிப் பணித்துறை தேர்வுக்கான பயிற்சி மேற்கொண்டு வந்திருக்கிறார். இஅப அகாடமியில் விடுதி வசதி இல்லாததால், தோழிகளோடு சேர்ந்து டெல்லி கரோல்பாக் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி படித்து வந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று மாலை 7 மணியளவில் சிரீமதி அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது. சிரீமதியின் உடலைக் கைப்பற்றிய கரோல்பாக் காவல்துறையினர், ஆர்.எம்.எல் மருத்துவனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர். 

சிரீமதி தற்கொலை செய்துகொண்டதாக கேள்விப் பட்ட செய்தியை அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் இன்று காலை சுமார் 8 மணியளவில் கோயமுத்தூரில் இருந்து விமானம் மூலமாக டெல்லிக்குச் சென்றிருக்கின்றனர். பெற்றோர் ஒப்புதல் அளித்த பின்னர், உடற்கூறு ஆய்வு செய்து சிரீமதியின் உடல் அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கபட இருக்கிறது.

நேற்று மதியம் சுமார் 2.30 மணியளவில் டெல்லியிலிருந்து பேசி மூலமாக சிரீமதி அவருடைய பெற்றோரிடம் பேசியிருக்கிறார். மதியம் 2.30 மணிக்குப் பேசியில் நன்றாகப் பேசியவர், மாலை தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டார் என்ற செய்தியைக் கேட்டு, சிரீமதியின் பெற்றோர் மட்டுமல்லாது, அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள உற்றார் உறவினர் எனப் பலரும் நம்ப முடியாமல் உடைந்து போயிருக்கின்றனர். 

சிரீமதி என்ன காரணத்திற்காக இறந்தார்? உண்மையிலேயே அவர் தற்கொலை தான் செய்து கொண்டாரா! போன்ற பல்வேறு கோணங்களில், சிரீமதியின் தோழிகளிடமும், பெற்றோர்களிடமும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் முடிவில் தான் என்ன நடந்தது என்பது தெரியவரும்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,954.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.