Show all

சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும்! சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவு

சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது என சென்னை அறங்கூற்றுமன்றம் உத்தரவு

17,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாட்டு அரசுக்கு சென்னை உயர் அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஒக்கியம் துரைப்பாக்கத்தைச் சேர்ந்த சேசன் என்பவர் பதிகை செய்த மனுவில், சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு இன மாடுகளை மட்டும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகள் பங்கேற்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

அந்த மனுவில், நாட்டு மாடுகளுக்கு பெரிய திமில் இருக்கும் என்பதால் அதனை சல்லிக்கட்டு வீரர்கள் பிடிக்க வசதியாக இருக்கும் எனவும், வெளிநாட்டு மற்றும் கலப்பின மாடுகளுக்கு திமில் இருப்பதில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த அறங்கூற்றுவர்கள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, சல்லிக்கட்டு போட்டிகளுக்கு அனுமதியளிக்கும் வகையில் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்ட சட்ட திருத்தத்தில், நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையிலும், தமிழ்நாட்டுப் பண்பாட்டை பாதுகாக்கும் வகையிலும் இச்சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளதை சுட்டிக்காட்டினர்.

வெளிநாட்டு மாடுகள் சல்லிக்கட்டில் கலந்து கொள்ள தடையில்லை என்ற அரசு தரப்பு வாதத்தை நிராகரித்த அறங்கூற்றுவர்கள், சல்லிக்கட்டு போட்டிகளில் நாட்டு மாடுகள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்க வேண்டும் எனவும், வெளிநாட்டு மாடுகள், கலப்பின மாடுகளை பங்கேற்க அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

சல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுகள் நாட்டு மாடுகள் என கால்நடை மருத்துவர்கள் சான்றளிக்க வேண்டும் எனவும், பொய் சான்றிதழ் அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது அறங்கூற்றுமன்ற அவமதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்கலாம் எனவும் அறங்கூற்றுவர்கள் உத்தரவிட்டனர்.

மேலும், நாட்டு மாடுகள் இனப்பெருக்கத்துக்கு ஊக்கம் அளிக்க அரசுக்கு அறிவுறுத்திய அறங்கூற்றுவர்கள், மாடுகளுக்கு செயற்கை கருத்தரித்தல் முறையை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.