Show all

நீட் தேர்வினால் மட்டும் மாணவர்கள் திறனை நிர்ணயம் செய்ய முடியுமா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

நாடு முழுவதும் வெவ்வேறு பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களை சிபிஎஸ்இ நடத்திய ஒற்றைத் தேர்வினால் மட்டுமே (நீட்) அவர்களின் திறன், அறிவாற்றல், தகுதியை நிர்ணயம் செய்ய முடியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

     இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மருத்துவர் பி.ராமசந்திரன் தாக்கல் செய்த பொது நல மனு விவரம்:

நீட் தேர்வில் எடுக்கும் மதிப்பெண் அடிப்படையில் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என, இந்திய மருத்துவக் குழு அறிவித்தது. அதன்படி நிகழ் கல்வியாண்டுக்கு (2017-18) மே 7-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. அதில் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தேர்வு எழுதினர்.

     இந்த நிலையில், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்ற விதியைத் திருத்தி, நீட் தேர்வு மதிப்பெண்களுடன், பிளஸ் 2 மதிப்பெண்ணையும் கணக்கில் கொண்டு எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.

     இது சம்பந்தமாக, கடந்த மாதம் இந்திய மருத்துவக் குழுவுக்;கும், நடுவண் அரசுக்கும் கடிதம் அனுப்பியும் எந்தவித பதிலும் இல்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

     இம்மனு அறக்கூற்றுவர்கள் என்.கிருபாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது,

வெவ்வேறு பாடத் திட்டத்தில் மாணவர்கள் படித்த நிலையில், சிபிஎஸ்இ நடத்திய ஒற்றைத் தேர்வினால் மட்டுமே (நீட்) அந்த மாணவர்களின் திறன், அறிவாற்றல், தகுதி ஆகியவற்றைத் தீர்மானிப்பது சாத்தியமா?

இரு தேர்வுகளின் (11மற்றும்12வகுப்புகளின்) மதிப்பெண்ணைக் கணக்கில் கொள்ளாமல் இருப்பது, மாணவர்களுக்கு பள்ளிப் படிப்பின் மீதான ஆர்வத்தைக் குறைத்து, நீட் தேர்வை மட்டுமே கவனத்தில் கொள்ளத் தூண்டாதா?

     வெவ்வேறு பாடத்திட்ட முறையில் ஏற்றத்தாழ்வு இருக்கும் பொருட்டு, இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை ஏன் கொண்டு வரக்கூடாது? தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் நீட் தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை ஏன் தமிழக அரசு நியமனம் செய்யவில்லை?

     சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேள்விகள் கேட்கப்படுவதால், 5 முதல் 10 விழுக்காடு உள்ள சிபிஎஸ்இ மாணவர்களே பெரும்பான்மையான இடங்களை ஆக்கிரமித்துக் கொள்ளும் நிலை ஏற்படும் அல்லவா?

     பல்வேறு பாடத் திட்டங்கள் நாடு முழுவதும் உள்ள நிலையில் நுழைவுத் தேர்வு பொதுவானதாக இருக்க வேண்டும் என்பது அவசியமா?

என்பன உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு மாநில அரசு, இந்திய மருத்துவக்குழு வரும் ஜூன் 27-க்குள் பதிலளிக்க உத்தரவிட்ட அறக்கூற்றுவர்கள், இந்தக் கேள்விகள் தேசிய அளிவில் மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கையில் விளைவை ஏற்படுத்தும் என்பதால், இந்த வழக்கை தலைமை அறக்கூற்றுவர் இந்திரா பானர்ஜி அமர்வுக்கு மாற்றிப் பரிந்துரைப்பதாகத் தெரிவித்தனர்

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.