Show all

நடுவண் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சி

ரூபாய் நோட்டுக்கள் விவகாரதில் நடுவண் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். கருப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என, ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என நடுவண் அரசு திடீரென அதிரடியாக அறிவித்துள்ளது. மாற்று வழிகளை நடுவண் அரசு முறையாக ஏற்பாடு செய்யாதால், சில்லறை தட்டுப்பாடு, ஏடிஎம்-களில் போதிய பணம் இல்லாத சூழல், வங்கிகளில் நீண்ட வரிசை, அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். நடுவண் அரசின் இந்த நடவடிக்கையை ஒருசாரார் புகழ்ந்து வந்தாலும், பொதுமக்கள் சொல்ல இயலாத நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்நிலையில், ரூபாய் நோட்டு விவகாரத்தில், நடுவண் அரசைக் கண்டித்து ரவிச்சந்திரன் என்ற இளைஞர், சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தின் மேலே ஏறி தற்கொலை செய்துகொள்ளப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளார். மேலும், டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தற்கொலை மிரட்டல் விடுத்துள்ள இளைஞர் ரவிச்சந்திரனிடம், தீயணைப்பு துறையினர், காவல்துறையிர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நடுவண் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.