Show all

தங்கச்சிமடத்தில் மீனவர்கள் 6-வது நாளாக போராட்டம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் ராமேசுவரம் தங்கச்சிமடம் மீனவர் பிரிட்ஜோ கடந்த 6-ந் தேதி பலியானார். அவரது உடலை வாங்க மறுத்து தங்கச்சிமடத்தில், 7-ந் தேதி முதல் மீனவர்கள் அறவழிப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

     அவர்களைப் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

     துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினரை கைது செய்ய வேண்டும்.

     இனி இதுபோன்ற தாக்குதல் நடத்தப்படக்கூடாது. இதற்கான உறுதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அல்லது அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளிக்க வேண்டும்.

     அதுவரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை. மீனவர் பிரிட்ஜோ உடலையும் வாங்க மாட்டோம் என மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

     இந்த சூழலில் நடுவண் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தங்கச்சிமடம் வந்து மீனவர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ஒப்பந்தத்தை மீறி இலங்கை கடற்படையினர் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கதுதான். நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்து விட்டது. இதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

     மேலும், உயிரிழந்த பிரிட்ஜோவின் உடலை பெற்று நல்லடக்கம் செய்வதோடு போராட்டத்தையும், கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

     ஆனால் அவரது தனிப்பட்ட கோரிக்கையை மீனவர்கள் நிராகரித்து விட்டனர். நடுவண் வெளியுறவுத்துறை இதுவரை எந்தவித உறுதியும் தராத நிலையில், போராட்டத்தை கைவிடக்கூறுவது நியாயம் இல்லை.

     நாங்கள் ஏற்கனவே கூறியபடி, வெளியுறவு அமைச்சர் அல்லது அதிகாரிகள் நேரில் வந்து உறுதி அளிக்காத வரை போராட்டத்தை கைவிட மாட்டோம். பிரிட்ஜோ உடலையும் வாங்க மாட்டோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் 6-வது நாளாக போராட்டம் இன்றும் (12-ந் தேதி) நீடிக்கிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.