Show all

தமிழ்நாட்டில் கொட்டித் தீர்க்கப் போகிறது மழை, மூன்று நாட்களுக்கு!

தமிழ்நாட்டில் மூன்று நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

15,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் கழிமுக  மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் (3.1 கிலோமீட்டர் உயரம்வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும், நாளையும், புதுக்கோட்டை, இராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் கழிமுக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

இன்றைக்கு, தெற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

நாளையும், நாளை மறுநாளும், தமிழ்நாடு கடலோர பகுதிகள், குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

எனவே மூன்று நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று அந்த அறிக்;கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,023.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.