Show all

23 மதுபான கடைகளும் மூடப்பட்டதால் டாஸ்மாக் இல்லாத கும்பகோணம்

உச்ச நீதிமன்ற ஆணையால் கும்பகோணத்தில் இருந்த 23 டாஸ்மாக் கடைகளும் நேற்று முந்தையநாள் முதல் மூடப்பட்டதால், மதுக் கடைகளே இல்லாத நகரமாக கும்பகோணம் திகழ்கிறது.

     கோயில் நகரமான கும்பகோணத்தில் 30-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகள் இருந்தன. இதுதவிர, 10-க்கும் மேற்பட்ட நட்சத்திர தகுதி பெற்ற தங்கும் விடுதிகளில் அனுமதி பெற்ற மதுகுடிப்பகங்கள் இயங்கி வந்தன.

     கும்பகோணத்தில் கடந்த ஆண்டு மகாமகத் திருவிழா நடை பெற்றபோது, மகாமக குளம் அருகே இருந்த டாஸ்மாக் கடை, அதன்பின், கும்பகோணம் ராமசுவாமி கோயில் அருகே இருந்த 2 கடைகள், நாகேஸ்வரன் கோயில், படைவெட்டி மாரியம்மன் கோயில் ஆகிய இடங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

     இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஆணைக்கிணங்க கும்பகோணத்தில் இருந்த 23 டாஸ்மாக் கடைகளும் நேற்று முந்தையநாள் முதல் மூடப்பட்டன. அதேபோல, நகரில் அனுமதி பெற்று இயங்கிவந்த பெரும்பாலான மதுகுடிப்பகங்களும் மூடப்பட்டுள்ளன.

     கும்பகோணத்தில் மதுக் கடைகளே இல்லாததால், மது வாங்க விரும்புபவர்கள் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பட்டீஸ்வரம், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மதுபான கடைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது.

     இதுகுறித்து டாஸ்மாக் மேற்பார்வையாளர் ஒருவர் கூறும் போது,

‘கும்பகோணம் நகரின் மையத்தில் தஞ்சாவூர்- விக்ர வாண்டி சாலை செல்வதால், அனைத்துக் கடைகளும் 500 மீட்டர் தூரத்துக்குள் உள்ளன. இதனால், இந்த கடைகளை மூட அதிகாரிகள் ஆணையிட்டுள்ளனர். இதற்குப் பதிலாக, வேறு இடங்களை பார்க்குமாறு அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் எந்த பக்கம் சென்றாலும் பொதுமக்கள் எதிர்ப்பு அதிகமாக உள்ளது. இதனால் புதிய கடைகளுக்கு இடம் பார்க்க முடியவில்லை’ என்றார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.