Show all

2,ஆடியே தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கு ஏற்றநாள்! தமிழ்நாடு என்று, நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட நாள் அது

உப்பு சப்பில்லாத 15,ஐப்பசி (நவம்பர் 1) நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதை விட, தமிழ்நாடு என்று நமது சட்டமன்றத்தில், நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட நாளான 2,ஆடியே தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கு ஏற்றநாள் ஆகும். இந்தமுறை தமிழ்நாடு நாளை சிறப்பாக கொண்டாட உரிய கருத்துப்பரப்புதலை முன்னெடுப்போம்.  

14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: 15,ஐப்பசி அன்று (நாளை) (நவம்பர் 1) உருவாக்கப்பட்ட மொழிவாரி மாநில அமைப்பை ஏற்கின்ற போதிலும், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாளான 2,ஆடி (ஜூலை 18) நாளைத்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியனும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
நாடு விடுதலை அடைவதற்கு முன்னரே பல்வேறு தரப்புகளிலிருந்தும் மாகாணங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அவ்வாறு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் ஒடிசாவாகும். இந்திய விடுதலைக்கு பனிரெண்டு ஆண்டுகளுக்கு முன்னமே ஒடிசா தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டதை அடுத்து, தற்போதைய தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை கொண்டிருந்த மெட்ராஸ் ராஜதானியையும் பிரிக்க வேண்டும் என்ற குரல் ஒலித்தது.
 
பெரியார், அண்ணா, ஜீவா, ம.பொ.சி, நேசமணி, சங்கரலிங்கனார் போன்ற தமிழகத் தலைவர்களும் மொழிவாரி மாகாண கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை முன்னெடுத்தனர். ராஜாஜி, கோல்வாக்கர் போன்றோர் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்ததால், போராட்டங்கள் தீவிரமடைந்தன.
 
68 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய தலைமைஅமைச்சர் ஜவஹர்லால் நேரு, இக்கோரிக்கையை ஏற்றதை அடுத்து, 65 ஆண்டுகளுக்கு முன்பு 15,ஐப்பசியில் (நவம்பர் 1) இந்தியாவின் 16 மாநிலங்கள், 3 நேரடி ஒன்றிய ஆட்சிப் பகுதிகளாக நாடு பிரிக்கப்பட்டது. அப்போது மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் இருந்த பகுதிகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்ற மொழிகளின் அடிப்படையில் மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.
 
அச்சமயம் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து விருதுநகரைச் சேர்ந்த விடுதலைப் போராட்ட வீரர் சங்கரலிங்கனார் உண்ணாநிலையைத் தொடங்கினார். 'உயிர் பெரிதன்று, மானமே பெரிது' எனத் தனி ஆளாக போராடிய அவரது உடல்நிலை நாட்கள் செல்லச் செல்ல மோசமானது. உண்ணாநிலையைக் கைவிடுமாறு அண்ணா, ம.பொ.சிவஞானம், காமராசர், சீவானந்தம் போன்றோர் கோரிக்கை விடுத்தும் சங்கரலிங்கனார் செவிமடுக்கவில்லை. இதனால் உடல்நிலை மிக மோசமாகி, 76ஆவது நாள் உயிர் நீத்தார், சங்கரலிங்கனார்.
 
அவரது மறைவுக்குப் பின்னர் பல்வேறு இயக்கங்கள் தமிழ்நாடு எனப் பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்தன. 59 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு கோரிக்கையை வலியுறுத்தி தனி சட்டமுன்வரைவு கொண்டுவந்தபோது அது நிராகரிக்கப்பட்டது. 57 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலச் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டபோதிலும் முடிவு கிட்டவில்லை.
 
54 ஆண்டுகளுக்கு முந்தைய சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணா முதலமைச்சரான பின்னர், 2,ஆடி (ஜூலை 18) அன்று தமிழ்நாடு எனப் பெயர் மாற்றத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அதே ஆண்டு 8,கார்த்திகை (நவம்பர் 23) அன்று தமிழ்நாடு பெயர் மாற்ற சட்டமுன்வரைவு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த ஆண்டு 1,தை (ஜனவரி 14) அன்று தமிழ்நாடு எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
 
இதனிடையே, மாநிலங்கள் பிரிக்கப்பட்ட 15,ஐப்பசியை (நவம்பர் ஒன்றாம் நாளை) தமிழ்நாடு தவிர்த்த மற்ற மாநில மக்கள் தங்களின் மாநில நாளாகக் கொண்டாடி வந்ததால் அந்த நாளை தமிழ்நாடு நாளாகவும் முந்தைய அதிமுக அரசு அறிவித்து அரசால் ஓர் ஆண்டுதான் கொண்டாடப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் அப்படியொன்றும் ஆர்வமாக எந்த அமைப்பும் சிறப்பாக தமிழ்நாடு நாளை முன்னெடுக்கவில்லை.

மொழிவாரி மாநில நாளாக நவம்பர் ஒன்றை கொண்டாடிய எந்த மாநிலமும் இந்திய நிருவாகத்தில் தங்கள் மொழிக்கான தகுதியை மேம்படுத்திக் கொண்டதான வரலாறு எதுவும் இல்லை. தமிழ்நாட்டோடு இணைந்து ஹிந்தித் திணிப்பையும் பெரிதாக எதிர்க்க வில்லை. 

ஒன்றிய அரசால் 16 மாநிலங்களும், மூன்று ஒன்றிய நேரடி ஆட்சிப் பகுதிகளும், மொழிவாரி மாநிலங்களாக அங்கீகரிக்கப் பட்டாலும், அட்டவணை எட்டில் இந்திய அரசின் அலுவல் மொழிகளாக, அரசியலமைப்பே அங்கீகரிக்கும் தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை இந்திய ஆட்சி நிருவாகத்திற்கோ அறங்கூற்றமன்ற நிருவாகத்திற்கோ முன்னெடுக்க முயலவேயில்லை. 

அந்த உப்பு சப்பில்லாத நாளை தமிழ்நாடு நாளாகக் கொண்டாடுவதை விட தமிழ்நாடு என்று, நமது சட்டமன்றத்தில், நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட நாளான 2,ஆடியே தமிழ்நாடு நாள் கொண்டாடுவதற்கு ஏற்றநாள் ஆகும். இந்தமுறை தமிழ்நாடு நாளை சிறப்பாக கொண்டாட உரிய கருத்துப்பரப்புதலை முன்னெடுப்போம்.  
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.