Show all

ஜெர்மனி நாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகள்

ஜெர்மனி, இந்தியா நாடுகளுக்கு இடையேயுள்ள புரிந்துணர்வின் அடிப்படையில் ஜெர்மனி நாட்டு கல்வி நிறுவனங்களில் இந்திய மொழிகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்ற நவம்பர் மாதம் சமஸ்கிருதத்திற்கு மாற்றாக ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வருவதை மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் நிறுத்தி வைக்க முடிவு செய்தது.

இதனால், அதிருப்தி அடைந்த ஜெர்மனியின் பிரதமர் மெர்கல் கடந்த நவம்பர் மாதம் பிரிஸ்பேனில் நடந்த ஜி-20 மாநாட்டின் போது பிரதமர் மோடியை சந்தித்து இதுகுறித்து பேசினார். அதையடுத்து, பிரதமர் மோடி இவ்விவகாரம் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

ஜெர்மனியின் கோதே கல்வி நிறுவனத்துடன் கடந்த 2011-ம் ஆண்டு போடப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 3-வது மொழியாக சமஸ்கிருதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், ஜெர்மன் மொழி கற்பிக்கப்பட்டு வருவதை நிறுத்திய விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்டெயின்மெரை சந்தித்து பேசினார்.

இந்தியா-ஜெர்மனி இடையே வலுவான நல்லுறவு நீடித்து வருவதாகவும், இந்தியா தொடர்ந்து ஜெர்மன் மொழியை கூடுதல் மொழியாக கற்பிக்கும் எனவும் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக, ஜெர்மனியில் உள்ள கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதம் உட்பட பல இந்திய மொழிகள் கற்பிக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. எனினும், இவ்விவகாரத்தில் தெளிவான முடிவு ஜெர்மனி பிரதமரின் இந்திய வருகையின் போது அறிவிக்கப்படும் என தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக ஜெர்மனியில் கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது, 10 ஆயிரத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் ஜெர்மனியில் கல்வி பயின்று வருகிறார்கள். அதேபோல், இந்தியாவில் 800-க்கும் மேற்பட்ட ஜெர்மனி நாட்டு மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

விரைவில், இந்தியாவில் சர்வதேச கல்வி மையம் ஒன்றை அமைக்கவும் ஜெர்மனி திட்டமிட்டுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.