Show all

ஆசிய துடுப்பாட்டப் போட்டியை இலங்கையில் முன்னெடுக்க வாய்ப்பில்லை! ரனதுங்கா கருத்து

15-வது ஆசிய கோப்பை 20 சுற்றுப் போட்டியாக இலங்கையில் நடத்தப்பட வேண்டியது ஆகும். இந்தப் போட்டி அடுத்து வரும் நான்காவது மாதத்தில் நடைபெற வேண்டும். இந்நிலையில், ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என்கிறார் ரனதுங்கா.

02,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இலங்கையில் நிலவிவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணம் பற்றி ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டி இலங்கையில் நடக்க வாய்ப்பு இல்லை என முன்னாள் தலைவர் ரனதுங்கா கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை துடுப்பாட்டப் போட்டி முப்பத்தியெட்டு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு ஆசிய கோப்பை (ஒரு நாள் போட்டி) ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்தது. இதில் வங்காள தேசத்தை வீழ்த்தி இந்தியா வாகையர் பட்டம் பெற்றது.

இதுவரை 14 ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா 7 முறை வாகையர் பட்டம் பெற்றுள்ளது. இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் ஆசிய கோப்பையை வென்றுள்ளன.

15-வது ஆசிய கோப்பை 20 சுற்றுப் போட்டியாக இலங்கையில் நடத்தப்பட வேண்டியது ஆகும். இந்தப் போட்டி அடுத்து வரும் நான்காவது மாதத்தில் நடைபெற வேண்டும். இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்கும்.

ஆனால் இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி இருப்பதால் ஆசிய கோப்பை போட்டி நடைபெற வாய்ப்பு இல்லை என்று அந்நாட்டு முன்னாள் தலைவர் அர்ஜூன ரனதுங்கா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

பொருளாதார நெருக்கடியால் இலங்கையில் ஆசிய கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது உறுதி இல்லை. அப்படி நடைபெற, மற்ற நாடுகளை நம்பி இருக்க வேண்டி உள்ளது. மக்களின் போராட்டம் இலங்கை அரசுக்கு எதிராக இருக்கிறது. துடுப்பாட்டக் கொண்டாட்ட மனநிலையை இலங்கை மக்களிடையே கொணரவியலாது. ஆசிய துடுப்பாட்டக் குழுவே இலங்கையில் இருந்து இந்தப் போட்டியை மாற்ற முடிவு செய்யலாம் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,219.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.