Show all

பீதியில் டோக்கியோ! ஒரே நாளில் 16 வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு

3,177 பேர் இன்று டோக்கியோவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனராம். இப்படி தொற்று அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் குறைந்து பீதி அதிகமாகி கொண்டிருக்கிறது..

15,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: டோக்கியோவில் இன்று 3,177 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல ஒலிம்பிக்கில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வீரர்கள், பொதுமக்களிடையே கலக்கம் ஏற்பட்டுள்ளது.

ஜப்பானில் 4வது கொரோனா பரவல் அலை தீவிரமாக இருக்கிறது. இதனால், தலைநகர் டோக்கியோவில் மூன்று  மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டன. இதற்கு பிறகு ஓரளவு தொற்று குறைந்தது. தொற்று குறையவும் கட்டுப்பாடுகளை தளர்த்தியது அந்நாடு. ஆனால், இப்போது மறுபடியும் அங்கு தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது.

மறுபடியும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், டோக்கியோவில் கடந்த கிழமை முதல் ஒலிம்பிக் போட்டிகளும் நடந்து வருவது மேலும் அச்சத்தை கூட்டி வருகிறது. இத்தனைக்கும் அவசரநிலை அறிவிக்கப்பட்ட வகையேடுதான் இந்த ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. 

அதேபோல, நேற்று ஒரே நாளில் டோக்கியோவில் 2,848 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட பிறகு டோக்கியோவில் ஏற்பட்டுள்ள அதிகபட்ச தொற்று இதுதான் என்று பேசப்படுகிறது. ஆனால், நேற்றைவிட இன்று வந்துள்ள தகவல் மேலும் அதிர்ச்சியூட்டுவதாக உள்ளது. 3,177 பேர் இன்று டோக்கியோவில் பாதிக்கப்பட்டுள்ளனராம். இப்படி தொற்று அதிகரித்துக் கொண்டே செல்வதால் அங்கு ஒலிம்பிக் போட்டிகள் மீதான ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பீதிதான் அதிகமாகி கொண்டிருக்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் வட்டாரத்தில் 16 புதிய கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாம். இன்று பாதிக்கப்பட்ட 16 ஆட்களுள் 3 தடகள வீரர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 தடகள வீரர்கள், விளையாட்டுக்களுடன் தொடர்புடைய ஆட்கள் 8 பேர், ஒலிம்பிக் ஊழியர் ஒருவர், ஒலிம்பிக் ஒப்பந்ததாரர்கள் 4 பேர் என மொத்தம் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒலிம்பிக்கை பொறுத்தவரை கொரோனா பாதிப்பு 169 ஆக அதிகரித்துள்ளது. இந்த தொற்று எண்ணிக்கையானது நாளுக்கு நாள் டோக்கியோவில் அதிகரிக்கும் என்றும் சொல்கிறார்கள். மக்கள் இதனால் கவலையும் அச்சமும் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் ஜூன் ஆஜ்மி சொல்லும்போது, தொற்றுப் பரவல் குறித்து அரசு, அதீத நம்பிக்கையுடன் செயல்படுகிறது. இப்படி இருந்தால் உறுதியாக மோசமான நிலைமை ஏற்படும் என்று எச்சரிக்கிறார். இப்போதைக்கு ஜப்பான் அணிதான் பதக்க பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. என்றாலும், ஒலிம்பிக் முடிந்ததுமே ஜப்பானை கொரோனா எனும் புதிய தேசிய நெருக்கடி தாக்கும் என்ற விமர்சனங்கள் இப்போதே முன்வைக்கப்பட்டு வருகின்றன.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.