Show all

இலங்கைக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியை வென்று தொடரை கைப்பற்றியது இந்தியா

இலங்கை மற்றும் இந்திய அணிகள்  3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் இலங்கையும் இரண்டாவது போட்டியில் இந்தியாவும் வென்ற நிலையில் தொடரின் வெற்றியை நிர்ணயிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்து. இலங்கை அணியில் அதிகபட்சமாக சதீரா சமரவிக்ரமா 42 ரன்களும், தரங்கா 95 ரன்களும் குவித்தனர்.  இந்திய அணி பந்துவீச்சில் குல்தீப் யாதவ், சஹால் தலா 3 விக்கெட்களும், பாண்டியா 2 விக்கெட்டும், பும்ரா, புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் விழ்த்தினர்.

அதன் பிறகு 216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். ரோகித் சர்மா 7 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் ஷ்ரேயாஸ் அய்யர் தவானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 135 ரன்கள் சேர்த்தது. ஷ்ரேயாஸ் அய்யர் 63 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் தவானுடன், தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இறுதியாக இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது. தவான் 100 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்தியாவின் குல்தீப் யாதவ் ஆட்டநாயகன் விருதையும், ஷிகர் தவான் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர். அடுத்ததாக இரு அணிகளும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளன. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.