Show all

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்: 180 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது பாகிஸ்தான்

நடப்பு சாம்பியன் இந்திய அணியுடனான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில், 180 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் முதல் முறையாக மினி உலக கோப்பையை கைப்பற்றியது. சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. டாசில் வென்ற இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது. ஹபீஸ் 57 ரன் (37 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), இமத் வாசிம் 25 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.  அதிகபட்சமாக தொடக்க பேட்ஸ்மேன் பகர் சமான் 114 ரன்கள் குவித்தார்.

இதைத் தொடர்ந்து 339 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ரோகித், தவான் இருவரும் துரத்தலை தொடங்கினர். முகமது ஆமிர் வீசிய முதல் ஓவரின் 3வது பந்திலேயே ரோகித் டக் அவுட்டாகி வெளியேற இந்தியாவுக்கு ஆரம்பமே பேரிடியாக இருந்தது. அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி 5 ரன் எடுத்து ஆமிர் வேகத்தில் ஷதாப் கானிடம் பிடிபட்டார். சிறிது நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடிய தவானும் 21 ரன் எடுத்து ஆமிர் பந்துவீச்சில் பலியானார்.

அதன்பின் இந்திய அணியால் மீள முடியவில்லை. டோனி 4 ரன்னிலும், கேதர் ஜாதவ் 9 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியா மட்டும் அதிரடியாக விளையாடி 43 பந்தில் 76 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். அதன்பின் வந்த ஜடேஜா 15 ரன்னிலும், அஸ்வின், பும்ப்ரா தலா ஒரு ரன்னிலும் அவுட்டாக இந்தியா 30.3 ஓவரில் 158 ரன்னில் ஆல்அவுட் ஆனது.  இதனால் இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. பாகிஸ்தான் 180 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முதல் முறையாக மினி உலக கோப்பையை தட்டிச் சென்றது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.