Show all

இருபக்க இடிபாட்டில் மத்தளமாக! இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக் பாண்டியா

மத்தளம் போல, இருபக்க இடிபாட்டில் உள்ளார், இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக் பாண்டியா. ஒரு பக்கம் துடுப்பாட்டங்களில் எடுபடவில்லை என்பது என்றால், சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனை மறுபக்கம்

30,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்திய துடுப்பாட்ட வீரர் ஹர்திக் பாண்டியா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சரியாக ஆடவில்லை. அதன்பின் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் சரியாக ஆடவில்லை.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் இவரின் காலில் செய்யப்பட்ட அறுவைசிகிச்சைக்குப் பின் துடுப்பாட்டத்தில், இவர் பந்து வீசுதலை நிறுத்திவிட்டார். இதனால் இந்திய அணிக்கும் இவர் பந்துவீசுவது கிடையாது.

இவரின் துடுப்பு வீச்சும் எடுபடவில்லை. இதனால் உலகக் கோப்பை தொடரின் போதே ஹர்திக் பாண்டியாவை எடுக்க கூடாது என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. ஆனால் அதையும் மீறி ஹர்திக் பாண்டியாவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனாலும் கூட ஹர்திக் பாண்டியா சரியாக ஆடவில்லை.

அதோடு இந்திய அணியும் முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான், நியூசிலாந்துக்கு எதிராக வீழ்ந்தது. இதனால் இந்திய அணி அரை இறுதிச்சுற்று செல்லும் வாய்ப்பை இழந்தது. 

இதையடுத்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20, தொடரில் இருந்து ஹர்திக் பாண்டியா புறக்கணிக்கப்பட்டு உள்ளார். இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது ஒரு பக்கம் என்றால்...

மும்பை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மூலம் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஹர்திக் பாண்டியா கடும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். இவரிடம் இரண்டு கைக்கடிகாரங்கள் இருந்துள்ளன. இரண்டும் புதியனவாகும். அவற்றுள் ஒன்றை கையில் கட்டி இருந்துள்ளார். இன்னொன்று அவரின் கை பையில் இருந்துள்ளது. இதன் இரண்டின் மதிப்பு ரூபாய் 1.5 கோடியாம். இவ்வளவு கோடி மதிப்புள்ள பொருட்களை துபாயில் இருந்து வாங்கி வர உரிய ஆவணம் தேவை. உரிய ஆவணம் எங்கே என்று கேட்டுள்ளனர். 

ஹர்திக் பாண்டியா இது குறித்த தன்னுடைய விளக்கத்தில் தானாகச் சென்று, அதிகாரிகளை சந்தித்து கடிகாரங்களைக் கொடுத்ததாக கூறியுள்ளார். 

இதையடுத்து அவரின் கடிகாரங்கள் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்பட்டன. இவர் கூடுதல் இறக்குமதி வரி கட்டி சில ஆவணங்களை கொடுத்த பின் கடிகாரங்கள் திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதனை மறுத்துள்ள ஹர்திக் பாண்டியா, என்னிடமிருந்து இரண்டு கைக்கடிக்காரங்கள் பறிமுதல் செய்யப்படவில்லை. ரூ.1.5 கோடி மதிப்பிலான ஒரே ஒரு கைக்கடிகாரம் மட்டுமே என்னிடம் இருந்தது. அதுவும், விமான நிலையத்துக்கு வந்ததும் நானே முன்வந்து சுங்கத் துறை அதிகாரிகளிடம் சென்று நான் கைக்கடிகாரம் கொண்டு வந்திருக்கும் தகவலைத் தெரிவித்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் நான் ஏதோ ஏமாற்றும் நோக்கில் கைக்கடிகாரத்தை மறைத்துக் கொண்டு வந்ததுபோல் தகவல் வெளியாகியிருக்கிறது.

நான் அந்தக் கைக்கடிகாரத்தை துபாயில் வாங்கினேன். அதற்கான சுங்க வரியை எங்கு கட்டச் சொன்னாலும் அதனைக் கட்ட நான் தயாராகவே இருந்தேன். நான் கடிகாரத்தைப் பற்றி சொன்னவுடன் அவர்கள் என்னிடம் அதற்கான ஆவணங்களைக் கேட்டனர். நான் ஆவணங்களைக் கொடுத்துள்ளேன். அவர்கள், அதற்கான சுங்க வரி மதிப்பீட்டைச் செய்து வருகின்றனர். அவர்கள் மதிப்பிட்டு தொகையைச் சொன்னவுடன் நான் வரியைச் செலுத்தப் போகிறேன்.

நான் நாட்டின் சட்டத்தை மதித்து நடக்கும் குடிமகன். நான் அரசின் அனைத்துத் துறைகளையும் மதிக்கிறேன். எனது கோரிக்கைகளுக்கு சுங்கத் துறையினர் ஒத்துழைப்பு தந்துள்ளனர். நானும் அவர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன். நான் சட்டத்தை மீறிவிட்டதாக பரவும் தகவல்கள் பொய். என்று கூறி விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,069.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.