Show all

அரையிறுதிக்கு முன்னேறியது ஆஸ்திரேலியா! பெண்கள் துடுப்பாட்ட உலகக் கோப்பை போட்டியில்

பெண்கள் உலகக்  கோப்பை துடுப்பாட்டத் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.

05,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: பெண்கள் உலகக்  கோப்பை துடுப்பாட்டத் தொடரில் ஆக்லாந்தில் இன்று நடைபெற்ற 18-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் இந்தியா மோதியது. 

பூவா தலையா வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 இலக்குகள் இழப்பிற்கு 277 ஓட்டங்கள் குவித்தது. யாஸ்திகா பாட்டியா 59 ஓட்டங்களும், மிதாலி ராஜ் 68 ஓட்டங்களும், ஹர்மன்ப்ரீத் கவுர் 57 ஓட்டங்களும், எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து  278 ஓட்டங்களும், எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, இந்தியாவின் பந்துவீச்சை நிதானமாக எதிர்கொண்டு சீராக ஓட்டங்களைச் சேர்த்தது. இதனால் ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்றது. இறுதியில், கடைசி ஓவரின் 3வது பந்தில் ஆஸ்திரேலியா அணி 280க்கு நான்கு என்ற கணக்கில ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.  

அதிரடியாக ஆடிய ஆஸ்திரேலியா அணியின் தலைவி மெக் லானிங் 107 பந்துகளில் 97 ஒட்டங்களும், அலிசா ஹீலி 65 பந்துகளில் 72 ஓட்டங்களும், குவித்தனர். மெக் லானிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி தனது 5 ஆட்டங்களிலும் வென்று 10 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து, முதல் அணியாக அரை இறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.  

மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில், 2 வெற்றி, 3 தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் நான்காம் இடத்தில் உள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,192. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.