Show all

பத்மபூஷன் விருதுக்கு மகேந்திர சிங் தோனி பெயரை பரிந்துரை செய்தது பிசிசிஐ

இந்திய அரசு ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பத்மபூஷண் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி இந்தாண்டு நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய விருதான பத்மபூஷன் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயரை பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது. 

பிசிசிஐ (பொறுப்பு) தலைவர் சி.கே.கன்னா, “பத்மபூஷன் விருதுக்கு மகேந்திர சிங் தோனியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது உறுப்பினர்கள் ஏகமனதாக எடுத்த முடிவாகும்." என கூறினார். மகேந்திரசிங் டோனி இதுவரை 90 டெஸ்ட், 302 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும் இதுவரை 331 சர்வதேச போட்டிகளில் கேப்டனாக பணியாற்றி அதிக போட்டிகளில் கேப்டனாக இருந்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

டோனி  ஒருநாள் போட்டிகளில் 9,737 ரன்களையும் டெஸ்ட் போட்டிகளில் 4876 ரன்களையும்  டி20 சர்வதேச போட்டிகளில் 1212 ரன்களை எடுத்துள்ளார். மேலும் இவர் விக்கெட் கீப்பராக 584 கேட்ச்களையும் 163 ஸ்டம்பிங்குகளையும் எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. டோனி தலைமையில் இந்திய அணி 2007ம் ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற அறிமுக டி20 உலககோப்பையும் 2011ம் ஆண்டு, இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பையும் மற்றும் 2013ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பையும் வென்றுள்ளது. மேலும் அனைத்து ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற முதல் கேப்டன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோனிக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டால், இந்த விருதைப் பெறும் 11-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை தோனி பெறுவார். ஏற்கெனவே கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர் ஆகியோருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. தோனிக்கு ஏற்கெனவே மதிப்பு மிக்க ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும், பத்மஸ்ரீ விருதும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.