Show all

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது T20 போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் ஏற்கனவே ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து ராஞ்சியில் நடந்த முதலாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ‘டக்வொர்த் லீவிஸ்’ விதிமுறைப்படி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. 

இந்நிலையில் 2–வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் இந்திய அணி முதலில் ஆட்டத்தை தொடங்கியது. ஆனால் இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. 4.3 வது ஓவரில் இந்திய அணி வெறும் 27 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் ரோகித் சர்மா, விராட் கோலி, மணிஷ் பாண்டே மற்றும் ஷிகர் தவான் என நான்கு விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி. அதனை தொடர்ந்து வந்த வீரர்களும் வரிசையாக ஆட்டமிழந்ததால் இந்திய அணி 19.6 வது ஓவரில் 118 ரன்களில் ஆல் -அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் ஜாதவ் 27 ரன்களும் ஹர்திக் பாண்டியா 25 ரன்களும் குவித்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஜாசன் பெரென்டோர்ப் 21 ரன்களில் 4 விக்கெட்களை வீழ்த்தி சிறப்பாக பந்து வீசினார்.

இதனை தொடர்ந்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலிய அணி 15.3 ஓவர்களில் 2 விக்கட்டுகளை மட்டும் இழந்து  122 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹென்றிக்ஸ் 62 ரன்களும் ட்ராவிஸ் ஹெட் 48  ரன்களும் குவித்தனர். இந்த வெற்றி மூலம் T20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.