Show all

நாளை 2-வது டெஸ்ட் தொடக்கம்

வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.இரு அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரில் காலேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 63 ரன்னில் அதிர்ச்சிகரமாக தோற்றது.

இந்தியா–இலங்கை அணிகள் மோதும் 2–வது டெஸ்ட் போட்டி கொழும்பு சரவணமுத்து மைதானத்தில் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

காலே டெஸ்டில் முதல் 3 நாட்கள் ஆதிக்கம் செலுத்தியும் இந்திய அணி தோற்றது ஏமாற்றமே. 176 ரன் இலக்கை எடுக்க முடியாமல் தோல்வி அடைந்தது. காலே டெஸ்டில் சதம் அடித்த ஷிகார் தவான் காயம் காரணமாக எஞ்சிய போட்டியில் ஆட முடியாமல் போனது இந்திய அணிக்கு பாதிப்பே. அவருக்கு பதிலாக மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை. முதல் டெஸ்ட் தோல்வியை தொடர்ந்து ஸ்டூவர்ட் பின்னி கூடுதலாக சேர்க்கப்பட்டு அணியோடு இணைந்துள்ளார்.

ரோகித் சர்மாவின் ஆட்டம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதேபோல ஹர்பஜன்சிங்கின் பந்துவீச்சும் காலே டெஸ்டில் எடுபடவில்லை. இதனால் நாளைய டெஸ்டுக்கான 11 பேர் கொண்ட அணியில் அதிரடியான மாற்றங்கள் இருக்கும்.

பேட்டிங்கில் கேப்டன் வீராட் கோலி, ரகானே ஆகியோரும், பந்துவீச்சில் அஸ்வின், அமித் மிஸ்ரா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கைக்கு பதிலடி கொடுக்க இந்திய வீரர்கள் முழு திறமையையும் வெளிப்படுத்த வேண்டும்.

சங்ககரா இந்த டெஸ்டோடு ஓய்வு பெறுவதால் இதில் அவருக்காக வென்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் இலங்கை உள்ளது.நாளைய டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.