Show all

ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய-இலங்கை டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஓர் அற்புதமான தொடக்கத

கேலேவில் தொடங்கியுள்ள இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் இந்திய பவுலர்களின் அசத்தலான பந்துவீச்சால் இலங்கை அணி 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு ஆடிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்துள்ளது.

டாஸ் வென்ற இலங்கை அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில், தவான், ராகுல், ரோஹித் சர்மா, கோலி, ரஹானே, சஹா, அஸ்வின், ஹர்பஜன் சிங், மிஸ்ரா, ஆரோன், இஷாந்த் சர்மா ஆகியோர் இடம் பிடித்தார்கள்.

எட்டு ஓவருக்குள் தொடக்க வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது இந்திய அணி. கருணாரத்னே, இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் 9 ரன்களிலும் சில்வா, ஆரோன் பந்துவீச்சில் 5 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்கள். பிறகு தனது அசத்தலான பந்துவீச்சால் சங்கக்காரா(5), லஹிரு திரிமானி(13), முபாரக் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அஸ்வின் வீழ்த்தினார்.

இதனால் உணவு இடைவேளையின்போது 23 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 65 ரன்கள் எடுத்தது இலங்கை அணி.

அதன்பின்னர் மேத்யூஸ்,சண்டிமல் ஓரளவு தாக்குப் பிடித்தார்கள். 43-வது ஓவரில் மேத்யூஸின் விக்கெட்டை வீழ்த்தினார் அஸ்வின். ரோஹித் சர்மாவின் அற்புதமான கேட்சில் 64 ரன்களுக்கு அவுட் ஆனார் மேத்யூஸ். அடுத்ததாக, ரன் எதுவும் எடுக்காமல் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் பிரசாத்.

பிறகு சண்டிமல், 59 ரன்களில் மிஸ்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தப் பந்தில் கௌசலின் விக்கெட்டை வீழ்த்தினார் மிஸ்ரா. அதன்பிறகு, கடைசி விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இது அவருடைய 6-வது விக்கெட். இதன்மூலம் முதல்நாளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு ஓர் அற்புதமான தொடக்கத்தைத் தந்துள்ளார் அஸ்வின்.

இலங்கை அணி, முதல் இன்னிங்ஸில், 49.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன்பின்னர் தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது இந்திய அணி. ராகுல் (7), ரோஹித் சர்மா (9) ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆனார்கள். இதன்பிறகு இணைந்த தவான் - கோலி ஜோடி, கடைசிவரை பொறுப்பாக ஆடியது. முதல்நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில், 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களை எடுத்துள்ளது. தவான் 53, கோலி 45 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.