Show all

சோகோ நிறுவனத்தின் சிறீதர் வேம்பு பெருமிதம்! நலங்குப் பணிகளுக்கான கருவியாட்கள் தயாரிப்பு நிறுவனத்தில் முதலீடு குறித்து

சிறீதர் வேம்புவின் சோகோ நிறுவனம் இதற்கு முன்பு பல்வேறு  நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனாலும் நலங்குப் பணிகளுக்கான கருவியாட்களைத் தயாரித்து வரும் நிறுவனத்தில் தன்; முதலீடு மிகவும் சிறப்பு என்று பெருமிதம் கொள்கிறார் சீறிதர் வேம்பு.

12,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆனந்த் மகிந்திரா முதலீட்டில் இயங்கி வரும் கருவியாளியல் (ரோபோடிக்ஸ்) நிறுவனமான ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்பு தலைமையில் இயங்கி வரும் சோகோ நிறுவனம் தனது உபரி பண இருப்பைக் கொண்டு சுமார் 20 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.

யூனிகார்ன் இந்தியா வென்சர், எஸ்இஏ குழுமம் எனப் பல முன்னணி முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீட்டைப் பெற்று இயங்கி வரும ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனம் நலங்குப் பணிகளுக்கான கருவியாட்களை தயாரித்து வருகிறது. நலங்கு வகைக்கான கருவியாட்கள் இன்றைக்கு சமுகஅறம் பேணலுக்கு மிகவும் முதன்மைத் தேவையாக உள்ளது.

சிறீதர் வேம்புவின் சோகோ நிறுவனத்தின் 20 கோடி ரூபாய் முதலீட்டின் மூலம் ஜென்ரோபோட்டிக்ஸ் நிறுவனம் தனது உற்பத்தி தளத்தை மேம்படுத்துவதற்குப் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனத்தின் கருவியாள் (ரோபோ) மூலம் மனிதர்கள் கழிவுகளை அள்ளும் நிலையை மாற்றவும், கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும் முடியும் என சோகோ மிகவும் பெருமையுடன் தெரிவித்துள்ளது.

விமல் கோவிந்த், அருண் ஜார்ஜ், ரசீத் கே மற்றும் நிகில் என்பி ஆகியோரால் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது, ஜென்ரோபாட்டிக்ஸின் முதன்மை தயாரிப்பான நலங்கு கருவியாள் (பாண்டிகூட் ரோபோ) ஆகும், இது உலகின் முதல் கருவியாள் தோட்டி என்று கூறப்படுகிறது.

குறுகிய மற்றும் இக்கட்டான இடங்களில் இருக்கும் கழிவுநீர் குழாய்கள், சாக்கடைக் கிணறுகள், மழைநீர் குழாய்கள், எண்ணெய் நீர் சாக்கடைகள் மற்றும் மழைநீர் சாக்கடைகள் போன்றவைகளைத் தூய்மை செய்ய இந்தப் நலங்கு கருவியாள் உதவுகிறது என ஜென்ரோபாட்டிக்ஸ் நிறுவனம் கூறுகிறது.

சிறீதர் வேம்புவின் சோகோ நிறுவனம் இதற்கு முன்பு பல்வேறு  நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. ஆனாலும் இந்த நிறுவனம் மிகவும் சிறப்பு என்று தான் சொல்ல வேண்டும் என்று பெருமிதம் கொள்கிறார் சீறிதர் வேம்பு.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,260.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.