Show all

உத்தரப்பிரதேசத்தில் குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற மருத்துவர்! விட்டுச் சென்ற மடல்: கொரோனா யாரையும் விட்டுவைக்காது

கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில்- உத்தரப்பிரதேசத்தில் குடும்பத்தினரை கூண்டோடு கொன்ற மருத்துவர் சுசில் சிங் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்யாண்பூரில்  உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் அகவை ஐம்பத்தைந்து உள்ள முனைவர் சுசில் சிங். இவரது மனைவி சந்திரபிரபா (அகவை 50) மகன் சிகார் சிங் (அகவை 21) மகள் குசி சிங் (அகவை 16).

இதற்கிடையில், கடந்த 17,கார்த்திகை அன்று (டிசம்பர் 3) சுசில் சிங் தனது மனைவி, குழந்தைகளை கொடூரமாக கொலை செய்துவிட்டு வீட்டில் இருந்து தப்பியோடினார். தேனீரில் மயக்க மருத்து கொடுத்து மனைவி சந்திரபிரபாவை சுத்தியலால் அடித்தும், மகன் சிகார் சிங், மகள் குசி சிங் ஆகிய இருவரையும் கழுத்தை நெரித்தும் சுசில் சிங் கொடூரமாக கொலை செய்துள்ளார். 

இந்த கொலை தொடர்பாக சுசில் சிங் எழுதிய மடலை காவல்துறையினர் கைப்பற்றினர். அந்த மடலில், தான் குணப்படுத்தமுடியாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மன அழுத்தத்தில் உள்ளதாகவும் கூறிய சுசில், 'கொரோனா யாரையும் விட்டுவைக்காது. எனது குடும்பத்தைச் சிக்கலில் விட்டுவிட்டு செல்ல விரும்பவில்லை. அவர்களை விடுதலை செய்து சிக்கல்களில் இருந்து வெளியேற்ற விரும்புகிறேன்' என தெரிவித்துள்ளார். 

குடும்பத்தினரை கொடூரமாக கொலை செய்த பின்னர் வீட்டில் இருந்து வெளியேறிய சுசில் தனது செல்பேசியை அணைத்து வைத்துள்ளார். இந்த கொடூரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தலைமறைவான சுசிலைத் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கான்பூர் மாவட்டம் சித்நாத் ஹட் பகுதியில் அழுகிய நிலையில் சுசில் சிங் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். சித்நாத் ஹட் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் அழுகிய நிலையில் பிணம் கிடப்பதை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் கண்டுபிடித்தார். இது குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வு இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர், அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றினர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் பிணமாக மீட்கபட்ட நபர் குடும்பத்தினரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய டாக்டர் சுசில் சிங் என்பது தெரியவந்துள்ளது. 

கைப்பற்றப்பட்ட உடல் மிகவும் மோசமான நிலையில் சிதைந்துள்ளதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சுசில் சிங்கின் ஆதார் அட்டை, செல்பேசி, ஓட்டுனர் உரிமம் உட்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 

சமூகக் கல்வியின் தொல்கதைகள் கூட்டுவித்த மூடநம்பிக்கைகள், உதிரத்தில் ஊறிப்போன நிலையில்- ஏட்டுக்கல்வியால்- கற்றுத் தேர்ந்த மருத்துவரை மீட்டு நிறுவமுடியவில்லை என்பது நெஞ்சத்தில் இழையோடும் நெருடலாகும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,098. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.