Show all

குறளிச்செலாவணிக்கு சட்ட முன்வரைவு! வருமா? வராதா? எப்போது? தொடரும் கேள்விகள்

அறங்கூற்றுமன்ற உத்தரவுக்குப் பிறகு குறளிச்செலாவணி (கிரிப்டோகரண்சி) வணிகம் இந்திய சிறு முதலீட்டாளர்கள் நடுவே மிகவும் பேரறிமுகமாகி வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் புலி வருது, புலி வருது (குறளிச்செலாவணி சட்ட முன்வரைவு) எச்சரிக்கை பாமரமக்கள், குறளிச்செலாவணி சேவை வழங்குநர்கள் வயிற்றில் புளியைக் கரைக்கிறது.

19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த ஆண்டு குறளிச்செலாவணி வணிகம் தொடர்பாக இந்தியக்கட்டுப்பாட்டு வங்கி வெளியிட்ட சுற்றறிக்கையைக் கண்டித்ததோடு, குறளிச்செலாவணி வணிகத்தின் மீதான தடையையும் நீக்கி உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

அறங்கூற்றுமன்ற உத்தரவுக்குப் பிறகு குறளிச்செலாவணி வணிகம் இந்திய முதலீட்டாளர்கள் குறிப்பாக சிறு முதலீட்டாளர்கள் நடுவே மிகவும் பேரறிமுகமாகி வருகிறது. பிட்காசு மாதிரி காசுகள் மற்றும் பல்வேறு முறிகள் என்பதாக குறளிச்செலாவணிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.

இப்போது பிட்காசு ஓராண்டில் 131 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. ஒட்டுமொத்த குறளிச்செலாவணி முதலீடுகள் மூன்று லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. 

குறளிச்செலாவணி வணிகத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதற்கான முயற்சிகளில், துறைசார்ந்த வல்லுனர்களுடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இதற்காக புதிய சட்டமுன்வரைவு கொண்டு வரப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, பரிவர்த்தனைகளுக்கு அல்லது பணம் செலுத்துவதற்கு குறளிச்செலாவணிகளைப்; பயன்படுத்துவதை ஒன்றிய அரசு தடை செய்யவும், இதற்கு மாற்றாக புதிய குறளிச்செலாவணியை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கியே வெளியிடவும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டது.

குறளிச்செலாவணியை எதிர்க்கும் பல்வேறு நாட்டு அரசுகளும், குறளிச்செலாவணியை தங்கள் தங்கள் நாட்டின் வரிக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் தொழில் நுட்பத்தை கட்டமைக்க முடியவில்லையே என்கிற ஆதங்கமே. சீ சீ இந்தப்பழம் புளிக்கும் என்பதான நடைமுறைகளில் அவைகள் ஈடுபடுவதற்கான காரணம் ஆகும். 

ஒன்றிய பாஜக அரசைப் பொறுத்த வரை இவ்வளவு வளர்ச்சி அடைந்து வரும் குறளிச்செலாவணியை 18விழுக்காடு வரி தண்டும் சரக்கு சேவை வரிக்குள் கொண்டுவந்தால் எப்படி இருக்கும். என்ற கனவில் திளைத்துப்பார்க்கிறது.

இதே போன்றதொரு சந்தைதான் இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் பங்குச்சந்தை. பங்குச்சந்தைகள் எல்லா நாடுகளிலும் தங்கள் தங்கள் நாட்டின் வரிக்கட்டுப்பாட்டுக்குள்தாம் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதில் குறளிச்செலாவணி அளவிற்கு பாமரமக்களும் முதலீடு செய்து வருமானம் காட்டும் வகைக்கு ஆர்வம் காட்டுவதில்லை. 

காரணம். நிருவாகம் அதிகம். கட்டணங்கள் அதிகம், வரி அதிகம். நுழைவதும் பெரிய வேலை. வெளிவருவதும் பெரிய வேலை. வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள ஆங்கிலமோ ஹிந்தியோ தெரிந்திருக்க வேண்டும். கிழமையில் ஐந்து நாட்கள் காலை 9.00 மாலை 3.30 வரைதான் சந்தை. ஆண்டுக்கு பனிரெண்டு நாட்கள் விடுமுறை. இப்படி நிறைய நிறைய நிருவாகங்களை பாமரமக்கள் இடர்பாடாகக் கருதுகின்றனர். 

இவ்வளவு நெடிய நடைமுறைகளோடு எந்த நாடு குறளிச்செலாவணியை முறைப்படுத்த நினைத்தாலும், அந்த நாட்டில் பாமர மக்கள் குறளிச்செலாவணியில் இருந்து முற்றாக வெளியேறுவது இயல்பாக நடந்துவிடும்.

இந்தநிலையில், இந்தியாவில் குறளிச்செலாவணி  சேவை வழங்கி வரும் நிறுவனங்கள் மீது சரக்கு சேவைவரி நுண்ணறிவு இயக்குநரகம் கவனம் செலுத்தி, குறளிச்செலாவணி பரிமாற்றங்களை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இது தொடர்பான சோதனையின்போது சுமார் ரூ.70 கோடி மதிப்புள்ள வரி வருமானம் இந்த நிறுவனங்களில் இருந்து சரக்கு சேவை வரியாக கிடைத்திருக்க வேண்டும் என்று பட்டியல் இடுகிறது.

இதுகுறித்து சரக்கு சேவைவரி வட்டாரங்கள் கூறுகையில், 'இந்த நிறுவனங்கள் குறளிச்செலாவணி நாணயங்களை வாங்குவதற்கும் விற்பதற்கும் இடைத்தரகர் சேவைகளை வழங்குகிறார்கள். இந்த சேவைகள் சரக்குசேவை வரி விழுக்காடான 18 விழுக்காட்டின் கீழ் வருகிறது. ஆனால் அவை அனைத்தும் ஏய்ப்பு செய்து வருகின்றன என்று தெரிவிக்கிறது.

குறளிச்செலாவணி சேவை வழங்குநர்கள் குறளிசெலாவணி பரிமாற்றங்களுக்கு தரகு மட்டுமே தண்டி வருகின்றனர். தாங்கள் இந்தச் சேவையில் தொடர்வதா? வேண்டாமா? என்று முடிவு செய்ய- இந்தியா குறளிச்செலாவணி மீது எடுக்கப்போகும் நடவடிக்கைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்தியா குறளிச்செலாவணிகளை சரக்கு சேவைவரிக்குள் கொண்டுவந்து விடுமேயானால் இவர்களால் தொடர்ந்து வணிகம் நடத்த முடியாது. கடையை மூடிவிடுவதற்கும் அணியமாகவே உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் சரக்குசேவை வரித்துறை சில நிறுவனங்களிடம் ரூ.30 கோடி மற்றும் ரூ.40 கோடியைத் தண்டியுள்ளதாகத் தெரியவருகிறது. பெரும் தொகை ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு வட்டி மற்றும் அபராதம் விதிக்கப்படும். சரக்குசேவை வரிச் சட்டங்களை மீறியதற்காக நடவடிக்கை எடுக்கப்படும். சோதனையின்போது குறளிச்செலாவணி சேவை வழங்குநர்களிடமிருந்து 70 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என்றெல்லாம் செய்தி வெளியிடப்பட்டு வருகிறது.

சட்ட அடிப்படை இல்லாதது சரக்கு சேவைவரித் துறையின் இந்த நடவடிக்கை என்றும் பேசப்பட்டு வருகிறது. எது எப்படி ஆனாலும் ஒன்றிய பாஜக அரசு குறளிச்செலாவணி குறித்து தெளிவான சட்டமுன்னெடுப்பை நிறைவேற்றும் வரை இதுபோன்ற நெருக்கடிகள், அதிரடிகள், அச்சங்கள் தொடர்ந்து கொண்டுதாம் இருக்கும். குறளிச்செலாவணியில் ஆயிரம் இரண்டாயிரம் முதலீடு செய்து விட்டு- வருமானத்திற்கு காத்திருக்கும் பாமரமக்களின் வயிற்றில் புளி கரைக்கப்பட்டுக் கெண்டிருக்கவே செய்யும்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,117.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.