Show all

பழைய இரும்புக்குப் போட்டுவிடும் நெருக்கடிக்கு ஒன்றிய அரசு சட்டம்! 15ஆண்டுகளுக்கு முன்பு உங்கள் தேரை (சொகுசுந்து) வாங்கியிருந்தால்

இந்தியாவில் பழைய வாகனங்களை, பழைய இரும்பாக கழிப்பதை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. அதாவது பழைய வாகனங்களை அழித்து விட்டு, புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு சட்டமியற்றி உள்ளது.

21,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் பழைய வாகனங்களை பழைய இரும்பாக கழிப்பதை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. அதாவது பழைய வாகனங்களை அழித்து விட்டு, புதிய வாகனங்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு சட்டமியற்றி உள்ளது.

இந்த வகைக்கு, பழைய வாகனங்களின் பதிவை புதுப்பிப்பது தொடர்பான புதிய விதிகள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புதிய அறிவிப்பின்படி, 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அகவையுடைய வாகனங்களின் உரிமையாளர்கள், வாகனங்களின் பதிவை புதுப்பிக்க வேண்டுமென்றால், வழக்கமான கட்டணத்தை விட சுமார் 8 மடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டும். 

இந்த அறிவிப்பு, அடுத்த ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் என ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, 15 ஆண்டுகளுக்கு மேலான எந்தவொரு தேரின் பதிவையும் புதுப்பிக்க வேண்டுமென்றால், 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலையில் பதிவை புதுப்பிப்பதற்கான கட்டணம் வெறும் 600 ரூபாய் மட்டுமே. 

அதேபோல் பழைய இரு சக்கர வாகனங்களின் பதிவை புதுப்பிப்பதற்கு 1,000 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கு தற்போதைய கட்டணம் வெறும் 300 ரூபாய் மட்டுமே. 

வணிகப்பயன்பாட்டிற்கான வாகனங்கள் என்றால், பதிவை புதுப்பிப்பதற்கு 12,500 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இதற்கான தற்போதைய கட்டணம் வெறும் 1,500 ரூபாய் மட்டுமே. 

அதே நேரத்தில் வாகனங்களின் பதிவை புதுப்பிக்கவில்லை என்றால், கூடுதல் அபராதங்களும் விதிக்கப்படும். தனியார் வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவை புதுப்பிக்கவில்லை என்றால், ஒவ்வொரு மாதமும் 300 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். 

வணிகப்பயன்பாட்டிற்கான வாகனங்களின் உரிமையாளர்கள் பதிவை புதுப்பிக்கவில்லை என்றால், ஒவ்வொரு மாதமும் 500 ரூபாயை அபராதமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. 

வணிகப்பயன்பாட்டிற்கான வாகனங்களின் உரிமையாளர்கள், வாகனங்களுக்கான தகுதிச் சான்றிதழை புதுப்பிக்க தவறினால், ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். 

ஒன்றியத் தலைநகர் பகுதியில், 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் தேர்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் தேர்களை இயக்க கூடாது என்ற தடை தொடரும். இந்த விதிமுறையில் எந்த மாற்றமும் இல்லை. 

பதிவைப் புதுப்பிப்பதற்கான கட்டணங்களை உயர்த்தி விட்டால், பழைய வாகனங்களைப் பயன்படுத்த மக்கள் தயங்குவார்கள். அதற்கு பதிலாக புதிய வாகனங்களை வாங்கும் எண்ணம் ஏற்படும் என்று கருதி, ஒன்றிய அரசு தற்போது இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. 

இந்த முடிவின் காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இது மக்களுக்கு கவலை அளிக்க கூடிய விடையமாகவும், வாகன உற்பத்தி  நிறுவனங்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய விடையமாகவும் இருக்கும். 

இதுதவிர, இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைக்க வேண்டும் என்பதை நோக்கமாகத் தெரிவித்து, பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மின்சக்தி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான முயற்சிகளையும் ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,029.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.