Show all

இந்தியாவின் குடியரசு தலைவர்!

இந்திய குடியரசு தலைவர் தேர்தல் தேர்தல் நாளது 02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124 (18.7.2022) அன்று நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இந்தியாவின் குடியரசு தலைவர் தேர்தல், அவரின் பொறுப்பு, குறித்த தகவல்களுக்கானது இக்கட்டுரை.

27,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் விரைவில் நிறைவு பெறுவதையடுத்து, அவர் வகிக்கும் பதவிக்கான தேர்தல் நாளது 02,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124 (18.7.2022) அன்று நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

இந்திய குடியரசு தலைவரை மாநிலங்கள், ஒன்றியப்பகுதிகளின்  சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்வு செய்கிறார்கள். இவர்கள் வாக்காளர் குழுமம் என்று அழைக்கப்படுகிறார்கள். சில மாநிலங்களில் மேலவை உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உரிமை இல்லை. அதேபோல, மாநிலங்களவை, மக்களவையில் நியமன உறுப்பினர்களுக்கும் குடியரசு தலைவர் தேர்தலில் வாக்குரிமை கிடையாது.

இந்திய விடுதலைக்கு 24ஆண்டுகளுக்குப் பிந்தைய மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இந்த தேர்தல் வாக்குகள் மதிப்பு கணக்கிடப்படுகிறது.

இந்த தேர்தலில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர் வாக்கு வங்கி மாறுபடும். மாநிலங்களவை உறுப்பினர், மக்களவை உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு மாறாது. அதே சமயம், மாநிலத்தில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மதிப்பு மாறுபடும்.

எடுத்துக்காட்டாக உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு, குறைந்த மக்கள்தொகை கொண்ட மணிப்பூர், கோவா, திரிபுரா ஆகியவற்றை விட அதிக மதிப்பைக் கொண்டதாக இருக்கும்.

இந்தியாவிலேயே அதிக வாக்கு மதிப்பைக் கொண்டது உத்தர பிரதேச மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர் பதவி. அங்கு ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 208 ஆகும். தமிழ்நாட்டில் ஒரு சட்டமன்ற உறுப்பினரின் வாக்கு மதிப்பு 176 ஆகும். அந்த வகையில் தமிழ்நாட்டின் மொத்த வாக்கு மதிப்பு 41184 ஆகும்.

அதே சமயம், நாட்டில் உள்ள ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒவ்வொருவரின் வாக்கு மதிப்பு 708 ஆகும்.

மாநில மக்கள்தொகையை அந்த மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையால் வகுத்து, அதன் ஈவை ஆயிரத்தால் பெருக்கிக் கிடைக்கும் வாக்குகளே அந்தந்த சட்டப்பேரவை உறுப்பினர் ஒவ்வொருவரும் அளிக்கும் வாக்குகளின் மதிப்பாக இருக்கும். அவ்வாறு ஆயிரத்தால் பெருக்கிய பிறகு மீதமுள்ளது ஐநூற்றுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

16வது குடியரசு தலைவர் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகள் மதிப்பு 5,43,231. பாராளுமன்ற உறுப்பினர்களின் மொத்த வாக்குகள் மதிப்பு 5,43,200. அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள குடியரசு தலைவர் தேர்தலில் உள்ள மொத்த வாக்குகளின் மதிப்பு 10,86,431.

இந்திய தேர்தல் ஆணையம், ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையும் குடியரசு தலைவர் தேர்தலை நடத்துவதற்கு மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்தலைவரைத் தேர்தல் நடத்தும் பொறுப்பு அதிகாரியாக சுழற்சி முறையில் நியமிக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலை மாநிலங்களவை செயல்தலைவர் நடத்துவார். மாநிலங்கள், ஒன்றியப்பகுதிகள் இந்த தேர்தலை நடத்துவதற்காக உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.

தமிழ்நாட்டில் இந்த முறை தேர்தல் நடத்தும் உதவி தேர்தல் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் டாக்டர் கே. சீனிவாசன், இணைச் செயலாளர் ஆர். சாந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் சட்டப்பேரவை செயலாளர் ஆர். முனிசாமி, சட்டப்பேரவை விவாதங்கள் பிரிவு ஆசிரியர் என். அலமேலு ஆகியோர் உதவி தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய குடியரசு தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்கள் விதி 7இன்படி இந்த தேர்தல் இந்திய நாடாளுமன்ற வளாகத்திலும், மாநில சட்டப்பேரவை வளாகத்திலும் நடைபெறும்.

இந்தத் தேர்தலில் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படாது. உறுப்பினர்கள் வாக்குச்சீட்டு முறையில் கமுக்கமாகத் தங்களுடைய வாக்குரிமையை செலுத்த வேண்டும். இந்த வாக்குச்சீட்டில் குறிப்பிட்ட வேட்பாளரை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் வழங்கும் சிறப்புவகை பேனாவை மட்டுமே வாக்காளர் பயன்படுத்த வேண்டும்.

குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சம்பந்தப்பட்ட வாக்காளர் இன்னாருக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என்று கட்சி மட்டத்தில் கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. மேலும், குறிப்பிட்ட வேட்பாளருக்கு சாதகமாக வாக்களிக்க பணம் கொடுப்பதும், செல்வாக்கை செலுத்தி வாக்குரிமை செலுத்த நிர்பந்திப்பதும் சட்டவிரோத செயலாக கருதப்படும்.

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட தொடர்புடைய வேட்பாளர் நேரடியாகவோ அவரை முன்மொழிபவர், வழிமொழிபவர் மூலமாகவோ வேட்பு மனுவைக் கொடுக்கலாம். ஆனால், அவரது வேட்பு மனுவுடன் அவரை முன்மொழிந்து 50 வாக்காளர்களும், வழிமொழிந்து 50 வாக்காளர்களும் மனுவில் ஆதரவைத் தெரிவித்து கையொப்பமிட்டிருக்க வேண்டும். ஒவ்வோர் வாக்காளரும் தலா ஒரு வேட்பு மனுவை முன்மொழிபவராகவோ வழிமொழிபவராக மட்டுமே பதிகை செய்ய முடியும். தொடர்புடைய வேட்பாளர் அதிகபட்சமாக நான்கு வேட்பு மனுக்களை வாங்க அனுமதிக்கப்படுவார். வேட்பு மனுவுக்கு முன்னதாக, அவர் இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி கரூவூலத்திலோ அரசு கருவூலத்திலோய ரூ. 15 ஆயிரம் பாதுகாப்பு வைப்புத் தொகையை செலுத்த வேண்டும்.

இந்தத் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறும் வாக்காளர்களான சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்களின் அண்மை முகவரி, தொடர்பு எண் விவரங்கள் அடங்கிய பட்டியலை ரூ. 300 கட்டணம் செலுத்தி தேர்தல் ஆணையத்தில் பெறலாம்.

குடியரசு தலைவர் தேர்தல், குடியரசு துணைத் தலைவர் தேர்தல்களில் வாக்களிக்க தகுதி பெறும் வாக்காளர்களில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தால் அவர், மாநில சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டும். மிகவும் கட்டாயத் தேவை எழுந்தால் மட்டுமே பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பாக முன்னனுமதி பெற்று சட்டப்பேரவை வளாக வாக்குச்சாவடியில் வாக்குரிமையை செலுத்த அனுமதிக்கப்படுவார்.

தேர்தல் முடிந்தவுடன் வாக்குகள் இடம்பெற்ற பெட்டிகள், பலத்த பாதுகாப்புடன் ஒவ்வோர் மாநிலத்தில் இருந்தும் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்துக்கு கொண்டு வரப்படும். வாக்கு எண்ணிக்கை நாளன்று, தேர்தல் பொறுப்பு அதிகாரி முன்னிலையில் இந்த வாக்குகள் எண்ணப்படும்.

குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடுபவர் இந்திய குடிமகனாக வாக்குரிமை பெற்றவராக இருக்க வேண்டும். அவர் குறைந்தபட்சமாக 35 அகவை அடைந்திருக்க வேண்டும். மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து தகுதிகளையும் அவர் நிறைவு செய்திருக்க வேண்டும்.

50 முன்மொழிபவர், 50 வழிமொழிபவரைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் ஆதரவை பெற்றிருந்தால் மட்டுமே குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளரின் மனு ஏற்றுக் கொள்ளப்படும்.

ஒன்றிய அரசாங்கத்தின் நிறைவேற்றுக் கடமைகளை செயல்படுத்துவதே குடியரசு தலைவரின் முதன்மைப் பொறுப்பாகும். இது தவிர இந்திய முப்படைகளுக்கு தளபதிகள், உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள், தலைமைஅமைச்சர் பதவியேற்பு உறுதிமொழி ஏற்க வைக்கும் அதிகாரத்தையும் குடியரசுத் தலைவர் பெறுகிறார்.

குடியரசு தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அந்த தலைவர் பிற தேர்தலில் போட்டியிடலாம். அதனால் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு அந்த தலைவருக்கு அவரது அரசியல் வாழ்க்கை முடிந்து விடுவதாக கருதும் பேச்சுக்கே இடமில்லை. குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் விரும்பினால், தொடர்ந்து முழு நேர அரசியலில் ஈடுபட சட்டம் தடையாக இருக்காது.

ஆனால், நாட்டின் மிக உயர்ந்த பதவியை வகித்த பிறகு அந்த தலைவர் ஆளுநராகவோ, பாராளுமன்ற உறுப்பினராகவோ, சட்டமன்ற உறுப்பினராகவோ இருக்க பொதுவாகவே விரும்புவதில்லை என்பதே இந்தியா இதுவரை கண்டு வரும் மரபு.

இந்தியாவில் அனைத்து அதிகார உரிமைகளை தலைமைஅமைச்சர் மட்டுமே மட்டுமே கொண்டிருக்கவில்லை. அரசியலமைப்பில் ஒவ்வொருவருக்கும் பணிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

குடியரசு தலைவருக்கே அரசியலமைப்பின் முழு நிறைவேற்று அதிகாரமும் உள்ளது, அதை அவர் சுயமாகவோ தனக்குக் கீழ் உள்ளவர்கள் மூலமாகவோ பயன்படுத்தலாம்.

தலைமைஅமைச்சரை நியமிப்பது மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பது குடியரசு தலைவரின் முக்கிய பொறுப்பு. இருவரும் தத்தமது பணிகளைத் தங்களுடைய அதிகார வரம்பை உணர்ந்து செயல்படுத்துவார்கள். இந்த இருவரின் ஒப்புதல் இல்லாமல் எந்த சட்டமும் செயல் வடிவம் பெறாது.

நிதி சட்டமுன்வரைவு நீங்கலாக வேறெந்த சட்டமுன்வரைவையும் மறுபரிசீலனைக்காக மீண்டும் நாடாளுமன்றத்திற்கே திருப்பி அனுப்ப குடியரசு தலைவருக்கு அதிகாரம் உள்ளது.

பதவி நீக்க நடவடிக்கை மூலம் குடியரசு தலைவரை நீக்க முடியும். இதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 14 நாட்களுக்கு முன்னதாக முறைப்படி கவனஅறிக்கை கொடுக்க வேண்டும். அதற்கான முன்மொழிவில் நான்கில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவையில் தீர்மானம் மீது விவாதிக்க அனுமதி வழங்கப்படும்.

இந்தத் தீர்மானத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை தேவை. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், குடியரசு தலைவர் பதவி வகிப்பவரை அப்பதவியில் இருந்து நீக்கலாம்.

இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசு தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டி மட்டுமே. அதுபோல இரண்டு முறை குடியரசு தலைவர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் மட்டுமே.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,275.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.