Show all

அறிந்துகொள்வோம்! இந்த வகையான ஸ்கூட்டர்களை சாலையில் ஓட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் காப்பீடும் தேவையில்லை

அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீக்கு மேல் இல்லாத வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்று அனுமதிக்கப்படுகிறது. அனால் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாகவும், தலைக்கவசம் அணியவும் எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.

14,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் ஓட்ட அனுமதிக்கப்படும் வாகனங்களும் சில உள்ளன. ஆம்! சில மின்சார ஸ்கூட்டர்களை ஓட்டுவதற்கு இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. 

இந்த ஸ்கூட்டர்களில் அதிக ஆற்றல் கொண்ட மோட்டார்கள் மற்றும் அதிக வேகம் இருக்காது. மேலும், இந்த குறைந்த ஆற்றல் கொண்ட மின்சார ஸ்கூட்டர்களுக்கு வாகனப் பதிவு மற்றும் காப்பீடு கூட பெறவேண்டிய கட்டாயம் இல்லை. அகவை எய்தாத சிறுவர்களுக்கும், அகவை முதிர்ந்தவர்களுக்கும் பக்கத்துக் கடை, கோயில், பூங்கா போன்று செல்வதற்கு இந்த வகை வண்டிகள் சிறப்பாக பயன்படும்.

1. ஹீரோ எலக்ட்ரிக் பிளாஷ் மின்2:  ரூ. 49,999 விலையுள்ள இந்த வண்டி லித்தியம் அயன் பேட்டரியில் இயங்கும் மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாகும். தோற்றத்தை பொறுத்தவரை இது வழக்கமான பெட்ரோலில் இயங்கும் ஸ்கூட்டர்களை போலவே இருக்கும். 48 வோல்ட் மின் அழுத்தம் 28 அம்பியர் மணி லித்தியம்-அயன் மின்கலம் மூலம் இயங்கும் 250 வாட் மின்சுழட்டியுடன் வருகிறது. 

இது அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும். இந்த வண்டிக்கு முழுமையாக மின்னேற்றம் செய்ய 4-5 மணிநேரம் ஆகும். மேலும் இதனை ஒருமுறை மின்னேற்றம் 65 கிமீ வரை ஓட்டலாம். மின்கலத்திற்கு 5 ஆண்டு உத்தரவாதம்  வழங்க்ப்படுகிறது.

2. லோஹியா ஓமா ஸ்டார் லி: ரூ. 51,750 விலையுள்ள இந்த வண்டி நான்கு வண்ணங்களில் வருகிறது. இதனை ஒருமுறை மின்னேற்றம் செய்தால், 60 கிமீ தூரம் ஓட்டும் வசதியை வழங்குகிறது. இதன் 20 ஆம்பியர் மணி மின்கலத்தை மின்னேற்றம் செய்ய 3 மணிநேரம் ஆகும். இந்த ஸ்கூட்டர் 1 ஆண்டு உத்தரவாதத்துடன் 12,000 கி.மீ. வரம்பை வழங்குகிறது.

3. ஹீரோ எலக்ட்ரிக் பிளாஷ் எல்எக்ஸ்: ரூ. 56,940 விலையுள்ள இந்த வண்டி மணிக்கு 25 கிமீ வேகத்தில் செல்லும். இதன் 51.2 வோல்ட் மின் அழுத்தம் மற்றும் 30 ஆம்பியர் மணி மின்கலத்தைக் கொண்டுள்ளது. இதை 4-5 மணி நேரத்தில் முழுமையாக மின்னேற்றம் செய்ய முடியும். இது 85 கிமீ வரை நீடிக்கும். ஸ்கூட்டர் மற்றும் மின்கலம் இரண்டும் 5 ஆண்டு உத்தரவாதத்துடன் வருகிறது.

4. ஒகினாவா லைட்: ரூ 63,990 விலையுள்ள மின்சார ஸ்கூட்டர் 1.25 கிலோ வாட் மணி லித்தியம்-அயன் மின்கலத்துடன் வருகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் செய்ய சுமார் 4-5 மணிநேரம் எடுக்கும். ஒருமுறை மின்னேற்றம் செய்தால் 60 கிமீ வரை செல்லும் என்று கூறப்படுகிறது. ஒகினாவா லைட் ஐந்து வண்ணங்களில் வருகிறது. அவை பளபளப்பான சிவப்பு, பேர்ல் ப்ளூ, சன்ரைஸ் மஞ்சள், ஆரஞ்சு லைட் மற்றும் கடல் பச்சை ஆகியவை ஆகும். ஒகினாவா 3 இலவச சேவைகள் மற்றும் மின்கலத்திற்கு 3 ஆண்டு உத்தரவாதத்தை வழங்குகிறது.

அதிகபட்ச வேகம் மணிக்கு 25 கிமீக்கு மேல் இல்லாத வாகனங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தேவையில்லை என்று அனுமதிக்கப்படுகிறது. அனால் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாகவும், தலைக்கவசம் அணியவும் எப்போதும் பரிந்துரைக்கப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,112.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.