Show all

ஜம்மு காஷ்மீர்!

ஜம்மு காஷ்மீரில் ஒரே கிழமையில் தீவிரவாதிகள் தாக்குதல்களால் எட்டு பேர் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆராய உள்துறை அமைச்சர் அமித்சா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

21,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு மற்றும் சட்டம், ஒழுங்கு நிலவரம் குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா டெல்லியில் நேற்று அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஒன்றிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

காஷ்மீரில் ஒரே கிழமையில் எட்டு பேர்கள், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, அங்கு பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிப்பது குறித்தும் ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்கா மற்றும் பாதுகாப்பு படைகளின் உயர் அதிகாரிகளுடன் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்சா நேற்று அவசர ஆலோசனை நடத்தினார்.

ஜம்பு காஷ்மீர் பெற்றிருந்த சிறப்புத் தகுதியை நீக்கியதோடு தொடர்ந்த குடியரசு தலைவர் ஆட்சியை ஜம்பு காஷ்மீரில் ஒன்றிய பாஜக அரசு நடைமுறைப்படுத்திவரும் நிலையில், காஷ்மீர் பண்டிட்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது காஷ்மீரில் அதிகரித்துள்ளது.

காஷ்மீரின் குல்காம் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் புகுந்த அடையாளம் காணப்படாத ஓர் ஆள், அந்த வங்கியின் மேலாளரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார். அடுத்த சில மணி நேரத்தில், நடு காஷ்மீர் பகுதியில் செங்கல்சூளையில் இருந்து திரும்பிய வெளிமாநில தொழிலாளர்கள் இருவரை தீவிரவாதிகள் சுட்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொருவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

நடு காஷ்மீர் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளி ஆசிரியை ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அதற்கு முன்பாக 3 காவல்துறையினர் மற்றும் காட்சிமடை நடிகை ஒருவரையும் தீவிரவாதிகள் படுகொலை செய்தனர். 

கடந்த ஒரு கிழமையில் மட்டும் மொத்தம் 8 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து காஷ்மீர் பண்டிட்கள் நூற்றுக்கணக்கானோர், சிறீநகர் உட்பட பல இடங்களில் நேற்று முந்தாநாள் போராட்டம் நடத்தினர். தங்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என அவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். பண்டிட்கள் பலர், பாதுகாப்புக்காக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் காஷ்மீரை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

இது குறித்து பண்டிட் ஒருவர் இயங்கலையில் வெளியிட்ட காணொளிப் பதிவில், 'அரசு எங்களை பிணைக் கைதிகளாக்கிவிட்டது. வீடுகளை விட்டு வெளியே செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம். காஷ்மீரில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதால், எங்களை ஜம்மு செல்ல அனுமதிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநரை கேட்டுக் கொள்கிறோம்' என கூறியுள்ளார்.

வெளிமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அரசியல் கட்சிகள், காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளன.

மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) கீச்சுவில் விடுத்துள்ள செய்தியில், 'சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. ஆனால், காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிவிட்டது என ஒன்றிய பாஜகஅரசு தொடர்ந்து புழுகிவருகிறது' என தெரிவித்துள்ளது.

தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சி, 'பாதுகாப்புப் படைகள் அதிகளவில் குவிக்கப்பட்டும் காஷ்மீரில் படுகொலை நிகழ்வுகள் தொடர்வது, அரசின் முழு தோல்வியை காட்டுகிறது. காஷ்மீர் நிலவரம், நெருக்கடி நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதற்கு எங்கள் கவலையை தெரிவிக்கிறோம். இங்கு யாருக்கும் பாதுகாப்பு இல்லை' என தெரிவித்துள்ளது.

வெளிமாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மக்கள் மாநாட்டு கட்சி, தொடர் படுகொலைகள் முடிவுக்குவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
காஷ்மீரில் பண்டிட்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களை பாதுகாக்கவும், தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்கவும், கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் அமித்சா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,269.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.