Show all

போலி ஆவணங்கள்! தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு அலுவலகங்களில், பேரளவு வடஇந்தியர்கள் இடம்பெற்றுவது இப்படித்தானா

வட இந்தியர்கள் பலர் போலியான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் கொடுத்து தமிழ்நாட்டில், ஒன்றிய அரசு அலுவலகங்களில், பணியில் சேர்ந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

30,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒன்றிய அரசு நிறுவனங்களில் வடமாநிலத்தவர்கள் அதிக அளவில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு நெடுங்காலமாக தொடர்ந்து எழுந்து வருகிறது.

தற்போது வட இந்தியர்கள் பலர் போலியான ஆவணங்களையும், தவறான தகவல்களையும் கொடுத்து பணியில் சேர்ந்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில்தான், நூற்றுக்கணக்கான வடமாநிலத்தவர்கள் போலியான சான்றிதழ்களைக் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில், ஒன்றிய சேமக்காவல் படை, அஞ்சல் துறை உள்ளிட்ட ஒன்றிய அரசின் நிறுவனங்களில் பணிக்குச் சேர்ந்துள்ள 200-க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள், தமிழ்நாட்டுத் தேர்வுத் துறையில் வழங்கியது போலப் போலியான மதிப்பெண் சான்றிதழை கொடுத்து பணியில் சேர்ந்திருக்கிறார்கள்.

ஒன்றிய அரசுப் பணியில் சேர்கிறவர்களின் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையைப் பரிசோதனை செய்யச் சம்பந்தப்பட்ட தேர்வுத்துறைக்கு அந்த சான்றிதழ்கள் அனுப்பிவைக்கப்படும் நடைமுறை உள்ளது. அப்படி, அண்;மையில் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்க்கப்பட்டவர்களின் சான்றிதழ்களைச் சரிபார்த்தபோது பலரின் சான்றிதழ்கள் போலி என்பது கண்டறியப்பட்டது. 

இதேபோல, இந்தியன் ஆயில் உள்ளிட்ட பல்வேறு ஒன்றிய அரசு நிறுவனங்களிலும் 200-க்கும் அதிகமான வடமாநிலத்தவர்கள் போலியான ஆவணங்களைக் கொடுத்து பணியில் சேர்ந்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தப் போலியான ஆவணங்கள் அரசுத் தேர்வுத் துறையின் பெயரில் தவறாக அச்சிடப்பட்டிருந்தது. மேலும், சான்றிதழ்களை வருடிப் பார்த்தபோது தகவல்கள் சரியானதாக இல்லை. கொடுக்கப்பட்டிருந்த போலிச் சான்றிதழ்கள் அனைத்துமே மிகவும் எளிமையாகக் கண்டறியும் வகையிலிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

போலிச் சான்றிதழ் கொடுத்துள்ள ஆட்களின் மீது காவல்துறையில் புகார் அளிக்கச் சம்பந்தப்பட்ட துறைக்கு அரசுத் தேர்வுகள் துறை பரிந்துரை செய்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,217.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.