Show all

அடுத்த கிழமை பேரறிவாளனுக்காக அமையுமா!

பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஒரு கிழமையில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உச்சஅறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

15,சித்திரை,தமிழ்த்தொடராண்டு-5124: இராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்ற பேரறிவாளன் மனு மீதான விசாரணை உச்ச அறங்கூற்றுமன்றத்தில் நேற்று நடைபெற்றது. 

உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர் நாகேஸ்வரராவ் தலைமையிலான அறங்கூற்றுமன்ற அமர்வு விசாரணையில், பேரறிவாளன் பாட்டில் ஆளுநர் இன்னும் முடிவெடுக்காமல் இருக்கிறார் என்று பேரறிவாளன் தரப்பிலிருந்து வாதம் முன்வைக்கப்பட்டது. 

இதற்கு தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்த ஒன்றிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், பேரறிவாளன் விடுதலை பாட்டில் குடியரசுத் தலைவருக்குத்தான் அதிகாரம் உள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஆளுநர் செயல்படும்விதம் குறித்துக்கூட குடிஅரசுத் தலைவரேதான் முடிவெடுக்க முடியும். அரசியல் சாசன பிரிவு 72-ம் இதைத்தான் மிகத் தெளிவாகக் கூறுகிறது எனக் கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள், ஆளுநர், குடியரசுத் தலைவர் அதிகாரம் குறித்த விடையங்களுக்குப் போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது- 

பேரறிவாளன் பாட்டில் ஆளுநரின் விடைகள் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளன. பேரறிவாளனை விடுவிப்பதே இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு எனக் கருதுகிறோம். விடுதலை செய்வதில் யாருக்கு அதிகாரம் என்ற குழப்பத்தில் பேரறிவாளன் ஏன் சிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர்.

அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் அது கூட்டாட்சி கட்டமைப்புக்கே மிகப்பெரிய பாதகமாகிவிடும். அதுமட்டுமல்லாமல், மாநில அமைச்சரவையின் முடிவுகளுக்கு எதிராகச் சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. மேலும், மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? என தங்களின் கருத்துகளையும், இந்தப்பாட்டில் ஆளுநர் அதிகாரம் மீதான கேள்விகளையும் முன்வைத்தனர்.

அதைத் தொடர்ந்து, இந்த விசாரணையில், பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை ஒன்றிய அரசு ஒரு கிழமையில் தெரிவிக்க வேண்டும் என்று கூறி வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்து உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,232.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.