Show all

ஆந்திராவில் கள்ள ரூபாய்தாள்களுடன் ஏழுபேர்கள் கைது!

ஆந்திராவில் கள்ள ரூபாய்தாள்களுடன் ஏழுபேர்கள் கைது! 

ரூ.5 ஆயிரம் உண்மை ரூபாய் தாள்களைக் கொடுத்தால் ரூ.20,000 கள்ள ரூபாய்தாள்களைத் தருவதாக தெரிவித்து கள்ள ரூபாய்தாள்களை புழக்கத்தில் விட்டு வந்த கும்பல் சிக்கியது.

13,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆந்திராவில் கள்ள ரூபாய்தாள்கள் வைத்திருந்த ஏழுபேர்களைக் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் ரெண்டலா கிராமத்தை சேர்ந்த உழவுத்தொழிலில் ஈடுபட்டுவந்த வெங்கட் நாராயண ரெட்டிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த ஏற்கனவே கள்ளரூபாய்தாள் வழக்கில் சிறைக்குச் சென்று வந்த சீனிவாச ராவ் நட்பு கிடைத்தது. 

அவரை தொடர்பு கொண்ட வெங்கட் நாராயண ரெட்டி கள்ள ரூபாய்தாள்களை அச்சடித்து புழக்கத்தில் விடுவது குறித்து ஆலோசனை செய்தனர்.

இதையடுத்து தாடசேபள்ளி ஷேக் ஜானி பாசாவுடன் இணைந்து நதிக்குடி கிராமத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணிப்பொறி, நகல் இயந்திரம் உள்ளிட்டவைகளை வைத்து கள்ள ரூபாய்தாள்கள் அச்சடித்தனர். 

ரூ.5 ஆயிரம் உண்மை ரூபாய் தாள்களைக் கொடுத்தால் ரூ.20,000 கள்ள ரூபாய்தாள்களைத் தருவதாக சிலரிடம் தெரிவித்தனர்.

இதையடுத்து குண்டூர் வெங்கட்ரமணா காலனியை சேர்ந்த அங்கம்ம ராஜி, லால் புராவை சேர்ந்த சிறீநிவாஸ், அர்ச்சன்பேட்டா வேல்பூர் கிசோர் பிரகாசம் மாவட்டம் கண்டகர் பூர்ண சந்திர ராவ் உள்ளிட்டவர்களிடம் கள்ள ரூபாய்தாள்களைக் கொடுத்து புழக்கத்தில் விட்டனர்.

இவர்கள் பெட்ரோல் பங்குகள், தேசிய நெடுஞ்சாலை ஓரம் உள்ள கடைகள், மதுபான கடைகள் உள்ளிட்ட இடங்களில் இரவு நேரங்களில் கள்ள நோட்டுகளை கொடுத்து பொருட்களை வாங்கி புழக்கத்தில் விட்டுள்ளனர்.

கடந்த புதியம் கிழமை பேரேச்சர்லாவில் உள்ள மதுபானக் கடையில் 2 பேர் 200 ரூபாய் கள்ள ரூபாய்தாள்களைக் கொடுத்து மதுபானம் வாங்கியுள்ளனர்.

அந்த ரூபாய்தாள் மீது ஐயமடைந்த கடைக்காரர்கள் இதுகுறித்து மெடிகொண்டுர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

காவல் துறையினர் நிகழ்வு இடத்திற்கு வந்து கள்ள ரூபாய்தாளுக்கு மதுபானம் வாங்கிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நதிகுடி கிராமத்தில் கள்ள ரூபாய்தாள்கள் அச்சடிப்பதாக தெரிவித்தனர்.

இதையடுத்து நதிகுடி கிராமத்துக்கு சென்ற காவல் துறையினர் அங்கிருந்த வெங்கட்நாராயண ரெட்டி, சீனிவாச ராவ், ஷேக் ஜானிபாஷா உட்பட 7 பேரை கைது செய்தனர்.

கள்ள ரூபாய்தாள் கும்பல் கடந்த 6 மாதமாக இரண்டு  லட்சத்திற்கு மேலான மதிப்புக்கு கள்ள கள்ள ரூபாய்தாள்களை புழக்கத்தில் விட்டுள்ளது தெரியவந்தது. 

மேலும் அவர்களிடம் இருந்து ரூ.45.05 லட்சம் ரூபாய்தாளுக்கு இணையாக மதிப்பு குறிப்பிடத்தக்க கள்ள ரூபாய்தாள்கள் மற்றும் கள்ள ரூபாய்தாள்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த வண்ண நகல் இயந்திரம், கணிப்பொறி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,111.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.