Show all

யோகி அரசும், அப்ரீன் பாத்திமாவும்!

உத்தரப்பிரதேசத்தில், வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை நிகழ்வுகளின் மூளையாக செயல்பட்டதாக ஜாவேத் முகமது என்பவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், பிரயாக்ராஜில் உள்ள அவரின் வீடு ஜே.சி.பி. வாகனம் மூலம் இடிக்கப்பட்டது. அவரின் மகள்தான் அப்ரீன்பாத்திமா 

31,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: உத்தர பிரதேசத்தில் பிரயாக்ராஜ் மாவட்ட நிர்வாகம் மூலம் அப்ரீன்பாத்திமா வீடு இடிக்கப்பட்டமை உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்துள்ளது. 

இவருக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய போராட்டக்காரர்களின் வீடுகள் தொடர்ந்து இடிக்கப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நபிகள் நாயகம் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இவரின் பேச்சுக்கு உலக நாடுகள் பல எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

கடந்த வெள்ளிக்கிழமை நுபுர் சர்மா கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டம் சில இடங்களில் கலவரத்தில் முடிந்தது, 

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500 பேர் மீது உத்தர பிரதேசத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இதில் 304 பேர் இதுவரை கைதாகி உள்ளனர். பிரயாக்ராஜில் மட்டும் 91 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த நிலையில்தான் சஹரன்பூர் பகுதியில் இருக்கும் போராட்டத்தில் கலந்து கொண்ட இரண்டு இஸ்லாமியர்களின் வீடுகள் நேற்று இடிக்கப்பட்டன. 

பிரக்யாராஜ் பகுதியில் நடந்த வன்முறை தொடர்பாக ஜாவித் முகமது என்பவரின் வீட்டின் முன்பகுதி இடிக்கப்பட்டது. இவர்- போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் முதன்மையானவர் என்று அரசு தெரிவிக்கிறது. அங்கு வளர்ச்சி பணிகள் கட்சி என்ற அமைப்பை இவர் நடத்தி வருகிறார். இவருக்கு அப்ரீன்பாத்திமா என்ற 22 அகவை மகள் இருக்கிறார். இவர்களின் வீட்டைதான் யோகி அரசு அங்கு இடித்துள்ளது. 

போராட்டத்தை தூண்டிவிட்டார் என்று இவர் மீது அம்மாநில அரசு குற்றஞ்சாட்டி உள்ளது. அதோடு ஆக்கிரமிப்பு நிலத்தில் இவர் வீடு கட்டி உள்ளதாகவும் யோகி அரசு குற்றஞ்சாட்டி இருக்கிறது. ஆனால் இவர் சொந்த நிலத்தில்தான் வீடு கட்டினேன் என்பதற்கான ஆதாரங்களையும் கொடுத்து இருக்கிறார். 

அப்ரீன்பாத்திமா, அவரின் அம்மா ஆகியோரை பிரயாக்ராஜ் காவல்துறையினர் தனியாக அழைத்து விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று இவர்கள் வீட்டை இடிக்கும் போது, அதில் இருந்து வெளியேற மறுத்து இவர்கள் உள்ளே போராட்டம் செய்தது குறிப்பிடத்தக்கது. இவர்கள் வீட்டில் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

அப்ரீன்பாத்திமா குடும்பம் பழிவாங்கப்படுவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. இந்திய அரசியல்வாதிகள் மட்டுமின்றி அரபு நாடுகள், இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த பலர் அப்ரீன்பாத்திமாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். அமெரிக்காவை சேர்ந்த இஸ்லாமியர் செயல்பாட்டாளர்களும் அப்ரீன்பாத்திமாவை திரும்பி பார்த்துள்ளனர். 

அப்ரீன்பாத்திமா தனது அப்பாவின் கட்சியில் மாணவர் பிரிவில் இந்திய அளவிலாக செயலாளராக இருக்கிறார். இவர் ஜெய்நரேன் வியாஸ் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அங்கு இடதுசாரி மாணவர் அணியின் உறுப்பினராக இருந்தார். அதேபோல் அலிகார்க் இஸ்லாமிய கல்லூரியில் இவர் மாணவிகள் சங்க தலைவராக இருந்துள்ளார். சிஏஏவிற்கு எதிராகவும் சுல்லி டீல்ஸ் போன்ற செயலிகளுக்கு எதிராகவும் இவர் போராடி இருக்கிறார். இவர் இஸ்லாமிய பெண்களின் உரிமைகளை பாதுகாக்க ஓர் இயக்கத்தையும் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது பல்வேறு நாட்டு இஸ்லாமியர்கள், அமைப்புகள் இவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளன.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,279.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.