Show all

தீபாதை தீய பாதை என்பதால்! தொடர்கின்றன மக்கள் போராட்டம்

தீபாதை என்கிற பொருளிலான சம்ஸ்கிருத தலைப்பில், பணி நிரந்தரம், ஓய்வூதியம் இல்லாத சேனைக்கூலித் திட்டத்தை அறிவித்திருக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இந்தத் திட்டத்திற்கு எதிராக பீகார், ராஜஸ்தானில் மக்கள் போராட்டங்கள் பேரளவாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

03,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5124: பாஜகவே இந்தியாவை காக்கும் படையணிபோல இராணுவ வீரன், நாட்டுப்; பற்று என்றெல்லாம் பீற்றிவந்த ஒன்றிய ஆட்சியில் ஈடுபட்டிருக்கும் பாஜக தற்போது தீபாதை என்கிற பொருளிலான சம்ஸ்கிருத தலைப்பில், பணி நிரந்தரம், ஓய்வூதியம் இல்லாத சேனைக்கூலித் திட்டத்தை அறிவித்திருப்பது மக்கள் நடுவே பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தை எதிர்த்து, வெறும் நான்கு ஆண்டுகள் மட்டும் வேலை கொடுத்தால் எஞ்சிய நாளில் என்ன செய்வது என்று கேட்டு இந்தியச்சேனையில் சேர ஆர்வம் கொண்டிருந்த  இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

ஒன்றிய பாஜக அரசு புதிதாக நான்கு ஆண்டுகள் சேனைக்கூலி என்ற திட்டத்தை தீபாதை என்கிற பொருளிலான சம்ஸ்கிருத தலைப்பில், அறிவித்திருக்கிறது. இந்த நான்கு ஆண்டு சேனைக்கூலியில் சேருபவர்களுக்கு ஓய்வூதியம் போன்ற எந்தவிதச் சலுகையும் இருக்காது. 

சேனைக்கு ஆள் சேர்ப்பதுபோல் சேர்த்து, அவர்களில் சிறந்த கொத்தடிமைக்கூலிகளில் 25 விழுக்காட்டு பேர்களை மட்டும் நான்கு ஆண்டுகள் பணி முடிந்த பிறகு நிரந்தமாக்கிட இதிலும், மாணவர்களைக் கழித்துக்கட்டும் நீட் போன்ற ஒரு தகுதி தேர்வு முறையை முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியச் சேனையில் சேரத் தங்களைத் தயார்படுத்திக்கொண்டிருக்கும் இளைஞர்கள் நடுவே கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

அவர்கள் ராஜஸ்தான், பீகாரில் போராட்டத்தில் குதித்துள்ளனர். பீகாரில் தொடர்வண்டி நிலையம் ஒன்றில் புகுந்து இளைஞர்கள் இரண்டு நாட்களாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். தொடர்வண்டி நிலையத்தில் புகுந்த இளைஞர்கள் அரசின் புதிய திட்டத்துக்கு எதிராக முழக்கமிட்டவாறு தண்டவாளத்தில் அமர்ந்து தொடர்வண்டிப் போக்குவரத்தை நிறுத்தினர். 

இதனால் 'நூற்றாண்டு மக்கள்' என்ற பொருளில் சம்ஸ்கிருத பெயர் கொண்ட தொடர்வண்டி 30 மணித்துளிகள் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. தொடர்வண்டி பாதுகாப்புப் படை வீரர்கள் பேரளவாக வந்து போராட்டக்காரர்களை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அந்த வழியாக வந்த தொடர்வண்டிகள் மீது கற்களை வீசித் தாக்கினர்.

முஸாபர்பூரில் சேனை உடற்தகுதி தேர்வுக்கு வந்திருந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சாலையில் டயர்களைப் போட்டு தீவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அங்குள்ள சக்கர் திடலில் சேனை உடற்தகுதி தேர்வுக்காகக் குவிந்திருந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இது குறித்துக் கூறுகையில், இரண்டு ஆண்டுகள் கழித்துத்தான் சேனைக்கு ஆள் சேர்க்கும் அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனால் சேனைக்கு வேலைக்கு எடுப்பவர்களில் 25 விழுக்காடு பேர்களை மட்டும் நான்குல ஆண்டுகள் கழித்து தொடர்ச்சியாக பணியில் வைத்துக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளனர். 

எஞ்சியவர்களுக்குப் பணிப் பாதுகாப்பும் இல்லாமல், ஓய்வூதியமும் இல்லாமல் எதிர்காலம் என்னாவது? என்று கேள்வி எழுப்பினர். ராஜஸ்தானிலும் ஜெய்ப்பூரில் டெல்லி - அஜ்மீர் நெடுஞ்சாலையில் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிய அரசின் புதிய சேனை ஆள் சேர்ப்புக் கொள்கைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பீகாரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நின்றிருந்த ஒரு தொடர்வண்டியைத் தீவைத்துக் கொளுத்தினர். இதனால் போராட்டம் வன்முறையாக மாறும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,282. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.