Show all

மம்தா பானர்ஜிக்கு என்ன ஆச்சு! நரேந்திர மோடி வலிமையானவர் என்று பிரசாந்த் கிசோர் சொல்லலாம்.

காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு விளம்பரம் செய்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. தலைமைஅமைச்சர் மோடியை மேலும் மேலும் பலம் மிக்கவராக மாற்றி வருவதே காங்கிரஸ் தான் என்று தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.

13,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெருவாரியான வெற்றி பெற்று 3வது முறையாக தொடர்ந்து ஆட்சியில் அமர்ந்திருப்பவர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி. இவரின் இந்த வெற்றிக்கு அடித்தளமாக இருந்தவர் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிசோர் என்று நம்பப் படுகிறது. 

அடுத்த ஆண்டு கோவா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அங்கு நிலை நிறுத்தும் பணிக்காக பிரசாந்த் கிசோர் பணியாற்றி வருகிறார். வரும் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட உள்ள நிலையில் மம்தா பானர்ஜியும், பிரசாந்த் கிசோரும் கோவாவில் முகாமிட்டுள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றில் பிரசாந்த் கிசோர் பேசும்போது, தோற்றாலும், வென்றாலும் அடுத்த 40 ஆண்டுகளுக்கு ஒன்றிய அளவில் பாஜக நிலைத்து நிற்கும், தலைமைஅமைச்சர் மோடியின் பலம் என்ன? அவர் ஏன் மக்கள் நடுவே செல்வாக்குமிக்கவராக இருக்கிறார் என இராகுல் காந்தி புரிந்து கொள்ளாமல் இருக்கிறார். இராகுல் நினைப்பது போல மக்கள் மோடியை அவ்வளவு எளிதில் தூக்கி எறிந்து விட மாட்டார்கள் என இராகுல் குறித்தும் காங்கிரஸ் குறித்தும் நேரடியாக தாக்கி பேசியிருந்தார்.

நரேந்திர மோடி வலிமையானவர் என்று பிரசாந்த் கிசோர் சொல்கிறார் என்றால், தான் வெற்றி பெறவைப்பதாக ஒப்புக் கொண்டிருக்கும் கட்சி சுழியம் என்று காட்டி, தன்னால்தான் எல்லாம் சாத்தியமானது என்று, தான் பொறுப்பு எடுத்துக் கொண்ட கட்சிக்கு அதிர்ச்சியோடான நம்பிக்கையை ஊட்டுவதற்கு ஆகும்.

சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாட்டில் திமுக- பிரசாந்த் கிசோர் நிறுவனத்திற்கு இத்தனை காசை கொட்டி அழுதிருக்க வேண்டாமே என்ற கருதுகோள், உண்மையான உண்;மை. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், திமுகவிற்கான வெற்றி- பாஜகவை தோளில் சுமந்த அதிமுக தெளிவாக ஆவணப்படுத்திய வெற்றியாகும்.

ஆனால் பிரசாந்த் கிசோரை அடியொற்றி, காங்கிரஸ் கட்சியின் மீது தாக்குதலை தொடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்த விஜய் சர்தேசாய் தலைமையிலான கோவா முன்னேற்ற கட்சியுடன், கூட்டணியை உறுதி செய்த மம்தா பானர்ஜி, செய்தியாளர்களிடையே பேசும்போது, 'காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு விளம்பரம் செய்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளது. தலைமைஅமைச்சர் மோடியை மேலும் மேலும் பலம் மிக்கவராக மாற்றி வருவதே காங்கிரஸ் தான்.

காங்கிரசால் ஒரு தீர்க்கமான முடிவு எடுக்க முடியாததால் நாடு இன்று சிரமப்படுகிறது. மேற்குவங்கத்தில் பாஜகவுக்கு எதிராக மோதாமல் என்னுடனும், என் கட்சியை எதிர்த்தும் மோதினர். இவ்வாறு மம்தா பேசினார். மேலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு மம்தா விடையளிக்க மறுத்துவிட்டார். எல்லாம் பிரசாந்த் கிசோருக்கே வெளிச்சம்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,052.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.