Show all

தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் நிறைவேற்றம்! ஆடுதாண்டும் காவிரியில் அடாவடியாக அணை கட்ட முயலும் கர்நாடகாவைக் கண்டித்து

ஆடுதாண்டும் காவிரியில் அடாவடியாக கர்நாடக அரசு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

07,பங்குனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமான கழிமுக மாவட்ட பாசன பகுதிகள் முழுக்க முழுக்க காவிரி நீரை நம்பியே உள்ளன. ஆனால் காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை கர்நாடக அரசு தராமல் தடுத்து வருகிறது.

இதற்கு மேலுமாக காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக எல்லை அருகே ஆடுதாண்டும் காவிரி (கன்னட மொழிபெயர்ப்பு மேகேதாட்டு) என்ற இடத்தில் மிகப் பேரளவான அணையை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்த போதிலும் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு தொடங்கி உள்ளது. இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசு மற்றும் காவிரி நடுவர்மன்றத்தின் அறிவுறுத்தல்களை மீறியும் கர்நாடக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. ஆடுதாண்டும் காவிரியில் அடாவடியாக அணை கட்டுவதை தடுத்து நிறுத்தும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இன்று தனித்தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆடுதாண்டும் காவிரியில் அடாவடியாக கட்டும் அணைக்கு எதிரான தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.

காவிரி நடுவர் மன்றம் நாளது  5.2.2007 அன்று அளித்த இறுதித் தீர்ப்பையும், உச்சஅறங்கூற்றுமன்றம் 16.2.2018 அன்று அளித்த தீர்ப்பையும் மதிக்காமலும், சம்பந்தப்பட்ட மாநிலங்களின் இசைவை பெறாமலும், ஒன்றிய அரசின் எந்தவித அனுமதியைப் பெறாமலும், தன்னிச்சையாக காவிரி ஆற்றின் குறுக்கே ஆடுதாண்டும் காவிரியில் அடாவடியாக அணைகட்ட நிதி ஒதுக்குவதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் கர்நாடக அரசின் இச்செயலுக்கு தனது கடும் கண்டனத்தை இப்பேரவை தெரிவித்துக் கொள்கிறது.

கர்நாடகாவின் ஆடுதாண்டும் காவிரியில் அடாவடியாக கட்டும் அணை திட்டத்திற்கு தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் உள்பட எவ்வித அனுமதியும் அளிக்கக் கூடாது என ஒன்றிய அரசை இம்மாமன்றம் வலியுறுத்துகிறது.

காவிரி ஆற்றுநீர் சிக்கல் ஒரு நீண்ட கால சிக்கலாகும் இதற்கு தீர்வாக உச்சஅறங்கூற்றுமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு செயலாக்கப்பட்டு வருகிறது. இச்சிக்கல் இரு மாநிலங்களின் உணர்வுப்பாடான சிக்கல் ஆகும். ஆதலால் ஆடுதாண்டும் காவிரியிலோ அல்லது காவிரி படுகையில் வேறு எந்த இடத்திலோ அணை அல்லது எவ்வித புதிய நீர்த்தேக்க திட்டத்தை, மற்றப்படுகை மாநிலங்களின் இசைவு இன்றியும், ஒன்றிய அரசின் ஒப்புதல் இல்லாமலும் மேற்கொள்ளக் கூடாது என கர்நாடக அரசினை அறிவுறுத்துமாறு ஒன்றிய அரசை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

உச்சஅறங்கூற்றுமன்றத்தின் 18.5.2018 ஆணையின்படி, அதன் 16.2.2018 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பினை செயல்படுத்த, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படாத, அணையை மேகதாதுவில் கட்ட கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை பரிசீலிக்கவோ, அதற்கு அனுமதி அளிக்கவோ கூடாது என்று ஆணையத்தை இம்மாமன்றம் கேட்டுக் கொள்கிறது.

கர்நாடக அரசின் இந்த முயற்சியை முறியடித்து, தமிழக விவசாயிகள் நலனைப் பாதுகாத்திட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் இப்பேரவை தனது ஆதரவை ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த தீர்மானத்தை ஆதரித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் பேசினார்கள். இறுதியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

அதன் பிறகு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,194.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.