Show all

செய்தி: இரண்டு! பேரறிவாளன் முழுமையாக விடுதலை வரிசையில்

உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர், பேரறிவாளன் முழுமையாக விடுதலை தீர்ப்பை வழங்கியுள்ளனர். இந்தத் தீர்ப்பு- பேரறிவாளனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றியாக கொண்டாடப்படுகிறது.

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச அறங்கூற்றுமன்றம் 142 என்கிற பிரிவில், வரலாற்றுச் சிறப்பு மிக்க அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. 142-வது பிரிவு என்பது உச்ச அறங்கூற்றுமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தும் வகைக்கான சிறப்புப் பிரிவு ஆகும்.

உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கி உள்ளனர். 

பேரறிவாளன் விடுதலைக்கு தமிழ்நாடு அமைச்சரவையின் தீர்மானத்தை ஒன்றிய அரசு நியமித்த தமிழ்நாட்டுக்கான ஆளுநர் ஏற்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், பேரறிவாளவன் தனது விடுதலைக்காக அவரே மனு பதிகை செய்தார். உச்ச அறங்கூற்றுமன்றத்தில் கடந்த சில கிழமைகளாக இந்த வழக்கில் விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த கிழமை விசாரணை முடிந்தது.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு வைத்த வாதத்தில், தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் உரிமை குடியரசுத் தலைவருக்கு கிடையாது. அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது. ஒன்றிய அரசு நியமிக்கும் மாநில ஆளுநர் அமைச்சரவை முடிவிற்கு கட்டுப்பட்டவர். அவர் அதில் முடிவு எடுக்க வேண்டும். மாறாக 3 ஆண்டுகளாக ஒரு முடிவை கிடப்பில் போட கூடாது. ஆயுள் தண்டனையை விடுதலை செய்யும் அமைச்சரவை தீர்மானத்தை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியாது. இந்தப்பாட்டில் அவர்கள் அரசியல் சாசனத்தின் அடிப்படையை அழித்துவிட்டனர். கருணை மனு மீது முடிவெடுக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு தான் உள்ளது என எங்கும் குறிப்பிடப்படவில்லை, என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்தது.

இதில் ஒன்றிய அரசு வைத்த வாதத்தில், பேரறிவாளன் வழக்கில் தண்டனை குறைக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு மட்டுமே உள்ளது. ஏற்கனவே அவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுவிட்டது. அவருக்கு ஏற்கனவே ஒரு நீதி சலுகை வழங்கப்பட்டுவிட்டது. இதனால் மீண்டும் அவரின் தண்டனையை குறைக்க கூடாது. இந்த வழக்கில் மத்திய புலானய்வு அமைப்பு விசாரித்த வழக்கு. இதன் காரணமாக அதில் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்கவே அதிகாரம் உள்ளது. ஆளுநர் ஏற்கனவே குடியரசுத் தலைவருக்கு இந்த மனுவை அனுப்பிவிட்டார். இதனால் அவர்தான் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்று வாதம் வைத்தது.

இதில் உச்ச அறங்கூற்றுமன்ற அறங்கூற்றுவர்கள் வைத்த வாதத்தில், ஆளுநர் எப்படி மாநில அமைச்சரவை எடுக்கும் முடிவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம். பேரறிவாளன் ஆயுள் தண்டனை கைதி என்பதால் அவரின் விடுதலையில் ஆளுநர்தான் ஒப்புதல் அளிக்க வேண்டும். அவர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது தவறு. இந்திய கூட்டாட்சி மெய்யியலுக்கே இது எதிரானது. பேரறிவாளனை யார் விடுதலை செய்வது என்ற அதிகார மோதலுக்கு இடையில் பேரறிவாளன் ஏன் சிக்கி தவிக்க வேண்டும். அவரை ஏன் நாங்களே விடுதலை செய்ய கூடாது. அமைச்சரவை முடிவு எடுத்தபாட்டில், ஆளுநர் முடிவெடுக்க வேண்டிய கட்டாயமே இல்லை. இந்த பாட்டில் ஆளுநரின் அதிகாரம் குறித்து முடிவெடுக்க போகிறோம், என்று கூறியது.

பேரறிவாளன் ஏற்கனவே சிறையில் 30 ஆண்டுகள் இருந்துவிட்டார். அவர் அங்கேயே படித்தும் விட்டார். அவரின் நடத்தையில் எந்தச் சிக்கலும் இல்லை. நீங்கள் விடுதலை செய்யும் வரை காத்திருக்காமல் நாங்களே ஏன் விடுதலை செய்ய கூடாது? என்று உச்ச அறங்டகூற்றுமன்றம் ஒன்றிய அரசுக்கும், ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டு ஆளுநருக்கும் கடுமையான கேள்விகளை எழுப்பியது. இந்த நிலையில் உச்ச அறங்கூற்றுமன்ற அறங்டகூற்றுவர்கள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பு வழங்கி உள்ளனர்.

உச்ச அறங்;கூற்றுமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச அறங்கூற்றுமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதாகும். 

அறங்கூற்றுமன்றம் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் ஆளுநர் செய்த தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது. அவரின் விடுதலை மீது ஆளுநர் முடிவு எடுக்காமல் 28 மாதங்கள் காலம்தாழ்த்தியது தவறு. இதனால் பேரறிவாளனை விடுதலை செய்கிறோம் என்று உச்ச அறங்கூற்றுமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,252. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.