Show all

இராகுல் காந்தியின் கீச்சுக் கணக்கு முடக்கப்பட்டுள்ளது!

ஒன்றிய குழந்தைகள் உரிமை ஆணையம் கீச்சு நிறுவனத்துக்கு கடிதம் எழுதி இராகுலின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளதால் இராகுலின் கீச்சுக்கணக்கு முடக்கப்பட்டுள்ளது. அந்த முடக்கம்  தற்காலிகமானது என்று தெரிவிக்கப்படுகிறது.

23,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான இராகுல் காந்தி, விதிமுறைகளை மீறி பதிவிட்டதால் அவரது கீச்சுக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பதாக தெரியவந்ததுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பாட்டுப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருக்கும் பதிவில், இராகுல் காந்தியின் கீச்சுக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது. அவரது கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்கு திரும்பக் கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. அதுவரையில் இராகுல் காந்தி தனது பிற சமூக வலைத்தள பக்கங்கள் வாயிலாக இணைப்பில் இருப்பார். தொடர்ந்து மக்களுக்காகவும், அவர்களின் நலன் சார்ந்த பணிகளுக்காகவும் அவர் குரல் எழுப்புவார். என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இராகுல் காந்தியின் கீச்சுக் கணக்கு 24 மணி நேரத்திற்குள் மறுசீரமைப்பு பணிகளுக்குப் பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று தெரியவந்துள்ளது.

அண்மையில் டெல்லியில் 9 அகவை தலித் சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அச்சிறுமியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்த இராகுல் காந்தி, சிறுமியின் தாயுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கடந்த வெள்ளியன்று தனது கீச்சுவில் வெளியிட்டிருந்தார்.

போக்சோ சட்டப்படி, பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சிறுமி, அவரின் குடும்பத்தினர் குறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதோ, இதழ்கள், தொலைக்காட்சிகளில் வெளியிடுவதோ குற்றமாகும். இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் கீச்சு நிறுவனத்துக்கு கடிதம் எழுதி இராகுலின் கணக்கு மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து கீச்சு நிறுவனம் இராகுலின் அந்த புகைப்படக் கீச்சுப்பதிவை நீக்கியது. இப்படி பதிவை நீக்கிய 24 மணி நேரத்திற்கு குறிப்பிட்ட கணக்கை முடக்கி வைப்பது கீச்சுவின் செயல்பாடாகும். எனவே தான் இராகுலின் கீச்சுக் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.