Show all

மதுரை கோட்டம் தென்னகத் தொடர்வண்டித்துறை வெளியிட்ட பொங்கலுக்கான இனிப்புச்செய்தி! 4சிறப்புத் தொடர்வண்டிகள்

தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு தொடர்வண்டிகளை இயக்குவதாக மதுரை கோட்டம் தென்னகத் தொடர்வண்டித்துறை தெரிவித்துள்ளது. 

09,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5123: தைப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு நான்கு சிறப்பு தொடர்வண்டிகளை இயக்குவதாக மதுரை கோட்டம் தென்னகத் தொடர்வண்டித்துறை தெரிவித்துள்ளது. 

இந்தச் சிறப்புத் தொடர்வண்டிகள் நாளது 28,மார்கழி முதல் 4,தை வரை (ஜனவரி 12-17)இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும்- போகித் திருநாள் தொடங்கி காணும் பொங்கல் வரை கொண்டாடப்படும் மூன்று நாட்கள் பொங்கல் திருவிழா விடுமுறையைச் சொந்த ஊரில் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடுவார்கள் வெளியூரில் பணியாற்றும் தமிழ்உறவுகள்.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கினாலும், மூட்டை முடிச்சுகளோடு, தொடர்வண்டியில் செல்வதை வசதிப்பாடாக பலர் விரும்புவார்கள். இந்த நிலையில் சிறப்புத் தொடர்வண்டிகளை இயக்க மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து சொந்த ஊர் செல்லவும் சொந்த ஊரில் இருந்து சென்னை வருவதற்கும் சிறப்பு தொடர்வண்டிகள் இயக்கப்பட உள்ளது. 

இதுகுறித்து மதுரை கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: வண்டி எண் 06001 தாம்பரம் - நெல்லை அதிவிரைவு சிறப்புத் தொடர்வண்டி நாளது 28,மார்கழி புதியம் கிழமை (ஜனவரி 12) இரவு 09.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8.15 மணிக்கு நெல்லை வந்து சேரும். 

மறுவழியில் வண்டி எண் 06002 நெல்லை - தாம்பரம் அதிவிரைவு சிறப்புத் தொடர்வண்டி நாளது 29,மார்கழி வியாழம் அன்று (ஜனவரி 13) இரவு 09.30 மணிக்கு நெல்லையிலிருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

வண்டி எண் 06005 சென்னை எழும்பூர் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்பு தொடர்வண்டி சென்னையிலிருந்து நாளது 29,மார்கழி வியாழம் அன்று (ஜனவரி 13) மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06006 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்புத் தொடர்வண்டி நாகர்கோவிலில் இருந்து நாளது 01,தை (ஜனவரி 14) மாலை 3.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும்.

வண்டி எண் 06004 நாகர்கோவில் - தாம்பரம் அதிவிரைவு சிறப்புத் தொடர்வண்டி நாளது 03,தை (ஜனவரி 16) ஞாயிற்றுக்கிழமை மாலை 04.15 மணிக்கு நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06003 தாம்பரம் - நாகர்கோவில் அதிவிரைவு சிறப்புத் தொடர்வண்டி 04,தை (ஜனவரி 17) திங்கட்கிழமை மாலை 03.45 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 4.20 மணிக்கு நாகர்கோவில் வந்து சேரும்.

வண்டி எண் 06040 நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில் நெல்லையில் இருந்து நாளது 03,தை (ஜனவரி16) ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு புறப்பட்டு அம்பாசமுத்திரம், தென்காசி, ராஜபாளையம் வழியாக சென்று மறுநாள் காலை 7.55 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். 

மறுமார்க்கத்தில் வண்டி எண் 06039 தாம்பரம் - நெல்லை சிறப்புத் தொடர்வண்டி நாளது 04,தை (ஜனவரி17) காலை 10.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர் வழியாக சென்று இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்து சேரும் என்று கூறப்பட்டுள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,107.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.