Show all

ஒன்றிய பாஜக அரசின் மூன்றாவது நகர்வு! ஹிந்தி பேசும், புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பயன்படும் வகைக்கானது

இந்தியா முழுவதும் தொழில் தேடி அலையும், ஹிந்தி மற்றும் வடஇந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட,  புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பயன்படும் வகைக்கு ஒர் மூன்றாவது நகர்வை முன்னெடுக்கிறது ஒன்றிய பாஜக அரசு. இரண்டாவது, முதலாவது நகர்வுகள் கட்டுரைக்குள்.

11,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஹிந்தி மற்றும் வடஇந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட, இந்தியா முழுவதும் தொழில் தேடி அலையும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, நாடு முழுவதும் எளிதாக குடும்ப அட்டைப் பொருள்கள் கிடைக்கும் வகைக்கு சிந்தித்து ஒன்றிய பாஜக அரசு ஒரேநாடு ஒரே குடும்பஅட்டைத் திட்டத்தை முன்னெடுத்து இரண்டாவது நகர்வாகச் செயல்படுத்தி வருகிறது.

இந்த வகை புலம்பெயர் மக்கள் பானிபூரி விற்பது, குல்பி விற்பது போன்ற தொழில்களிலும், தொழிற் கூடங்களில், கட்டுமானப் பணிகளில் உடல் உழைப்புக் கூலிகளாகவும் ஈடுபட்டு, பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்த மண்ணில் கல்வி வேலைவாய்ப்புக் கொடுக்க எந்தத் திட்டமும் முன்னெடுக்காமல், அவர்களின் நாடோடி பிழைப்புக்கு கொஞ்சமாக ஒத்துழைப்பை முன்னெடுத்து வருகிறது நடப்பு ஒன்றிய பாஜக அரசு.

இவர்கள் யாருக்கும் புலம்பெயர் மண்ணில் சொந்தவீடு கிடையாது. பெரும்பாலானவர்களுக்கு வாடகைக் குடிசையும் கிடையாது. பெரும்பாலனவர்கள் நம்பியிருப்பது தொழில், கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் அமைத்துத் தரும் தகரக் கொட்டகைகள், தாங்களாக அமைத்துக் கொள்ளும் கூடாரங்களே இவர்களுக்கான இருப்பிடமாகும்.

தொழில், கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் அமைத்துத் தரும் தகரக் கொட்டகைகளில் பிழைக்கிறவர்களுக்கு சமைப்பதற்கு இலவச மின்சாரம் கிடைத்து விடும். இவர்களுக்கு எரிவாயு அடுப்புகள் மாதிரி மின்சார அடுப்புகள் நல்ல அறிமுகம். தாங்களாக அமைத்துக் கொள்ளும் கூடாரப் பிழைப்பு மக்களுக்கு சுற்றுவட்டாரங்களில் கிடைக்கும் சுள்ளிகளே சமைப்பதற்கான எரிபொருள் ஆகும்.

இந்த நிலையில், நியாய விலைக்கடைகள் மூலம் சமையல் எரிவாயு உருளை, சில்லறை விற்பனைக்கு என்பதாக, ஒன்றிய பாஜக அரசு திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

இந்தத் திட்டத்தில், சிறிய சமையல் எரிவாயு உருளைகளை நியாய விலைக்கடைகள் மூலம் சில்லறை விலைக்கு விற்பனை செய்ய ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு உள்ளது. இந்தத் தகவலை ஒன்றிய உணவு மற்றும் பொது கொண்டுதருதல் துறை செயலாளர் சுதான்சு பாண்டே நேற்று தெரிவித்து உள்ளார். நியாய விலைக்கடைகளின் நிதி சாத்தியக்கூறுகளை அதிகரிப்பது குறித்து நேற்று நடத்தப்பட்ட மெய்நிகர் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தகவலை அவர் வெளியிட்டார்.

இந்தக் கூட்டத்தில் மின்நேரியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், நிதிச்சேவைகள் துறை, பெட்ரோலிய அமைச்சகம் அதிகாரிகள், மாநிலங்கள், ஒன்றியப்பகுதி அதிகாரிகள் மற்றும் இந்தியன் ஆயில் கழகம், பாரத் பெட்ரோலியம் லிட்., இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற எண்ணெய் நிறுவன அதிகாரிகளும் பங்கேற்றனர்.

சமையல் எரிவாயு உருளை விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மானிய உருளை விலை மூன்று மடங்குக்கு மேலாக அதிகரித்து தற்போது ரூ.900 ஆயிரத்தை கடந்து உள்ளது. வங்கிக் கணக்கிலேயே மானியம் வெறுமனே 25 ரூபாய் மட்டுமே. அதுவும் பலருக்கு வருவதே இல்லை என்கிற குற்றச்சாட்டும் தொடர்கிறது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தத் திட்டம் தமிழ்நாட்டு ஏழை, நடுத்தர மக்களுக்கு தேவைப்படாது. தொழில், கட்டுமான ஒப்பந்த நிறுவனங்கள் அமைத்துத் தரும் தகரக் கொட்டகைகளில் பிழைக்கும் ஹிந்தி மற்றும் வடஇந்திய மொழிகளை தாய்மொழியாகக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கும் சமையலுக்கு இலவச மின்சாரம் கிடைப்பதால், பெரியதாகப் பயன்பட வாய்ப்பில்லை. 

தாங்களாக அமைத்துக் கொள்ளும் கூடாரங்களை இருப்பிடமாக்கி, பிழைப்பு நடத்திவரும் ஹிந்தி மற்றும் வடஇந்திய மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட புலம்பெயர் தொழிலாளர்களுக்கே இந்தத் திட்டம் பெரிதும் பயன்படும். 

நம்மீது ஹிந்தித் திணிப்பை- நேற்று காங்கிரசும் இன்று பாஜகவும் ஒன்றிய ஆட்சியில் இருந்து கொண்டு நிர்பந்திப்பது, இவர்களுக்கு நாம் பிழைப்பு கொடுக்க- நமக்கு ஹிந்தி தெரிந்திருக்க வேண்டும் என்பதான முதல் வகை நகர்வுக்கானதே. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,050.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.