Show all

நீட் தேர்வு எழுதிய 17 அகவை மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி! 40 விழுக்காட்டு தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதி

நீட் தேர்வு எழுதிய 17 அகவை மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள அதிர்ச்சி  நிகழ்ந்துள்ளது. 40 விழுக்காட்டு தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

31,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5123: என்னுடைய மண். என்னுடைய மண்ணுக்கான பாடத்திட்டம். என்னுடைய மண்ணில்  பனிரெண்டு ஆண்டுகள் கற்றும் பாராட்டு பெற்றும் சாதித்தே வருகின்றனர் என் பிள்ளைகள். 

திடீரென்று பதின்மூன்றாவது ஆண்டில் காலடி வைக்க பனிரெண்டு ஆண்டுகளாக என்பிள்ளைகளுக்கு எந்த அறிமுகமும் இல்லாத வேறு ஒரு பாடத்திட்டத்தில், என் பிள்ளைகளுக்கு ஏன் நீட் என்கிற ஒரு தடை? 

பதின்மூன்று - என் மண்ணுக்கு மட்டும் ஆகூழ் இல்லாத எண்ணா? என் மண்ணுக்கான சட்டம், வழக்கறிஞர்கள், அறங்கூற்றுவர்கள், அறங்கூற்றுமன்றங்கள், அவைகளுக்கு நான் செலுத்தும் வரிகள் எதற்கு? என் பிள்ளைகளுக்கான நியாயம் மறுப்பதற்கா? 

கடந்த 75 ஆண்டுகளாக விடுதலை நாள் கொண்டாடி வரும் எனக்கு உண்மையில் விடுதலை கிடைக்கவில்லையா? என் பிள்ளைகளை விடுதலை பெற்ற மண்ணில் வாழ்வதாக பொய்யாக மூளைச்சலவை செய்து வரும் மூடனா நான்? என்மண்ணுக்கு விடுதலை கிடைத்து விட்டதாக நான் கருதுவது கனவா?  

தமிழ் நாட்டில் இப்படி மருத்துவ கல்விக்கு ஆசைப்படும் பிள்ளைகளின் பெற்றோருக்கு ஒன்றியத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து ஆயிரம் கேள்விகள் மனதில் அலைபாய்ந்து கொண்டு இருக்கிறது. அவர்களால் விடுதலை பெற்ற இந்தியாவில் முன்னெடுக்கப்படும் இந்த நியாயமற்ற கொடூரத்தில் இருந்து மீள்வது எப்படி என்று தெரியவில்லை. 

இதற்கான காரணமாவது: நீட் தேர்வு எழுதிய 17 அகவை  மாணவி தீக்குளித்து தற்கொலை முயற்சி செய்துள்ள அதிர்ச்சி  நிகழ்ந்துள்ளது. 40 விழுக்காட்டு தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ படிப்புக்கு அயல் பாடத்திட்டத்தின் அடாவடி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பெற்றது. தமிழ் நாட்டில் 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பெற்றது. இதில் ஒரு லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என நினைத்து சில மாணவ, மாணவிகள் தற்கொலை என்ற விரக்தி முடிவை எடுத்து வருகின்றனர். நீட் தேர்வு தோல்வி அச்சத்தால் சேலம் மாவட்டம் கூழையூரை சேர்ந்த தனுசு, அரியலூர் மாவட்டம் துளாரங்குறிச்சியை சேர்ந்த கனிமொழி ஆகியோர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறைவதற்குள் மற்றொரு மாணவி நீட் தோல்வி அச்சத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த தலையாரம்பட்டு கிராமத்தை சேர்ந்த மாணவி சவுந்தர்யா கடந்த ஞாயிற்றுக்கிழமை நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால், அனுபவம் இல்லாத அயல் பாடத்திட்ட நீட் தேர்வில் சரியாக எழுதவில்லை, இதனால் மதிப்பெண் குறையும் என்ற விரக்தி எண்ணத்தால் மாணவி சவுந்தர்யா கடந்த சில நாட்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார்.  

இந்நிலையில், மாணவி சவுந்தர்யா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்தத் துன்பநிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அய்யஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலநாதன். சேத்துப்பட்டு எம்.சி.சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் இவரது மனைவி சிபா மாடம்பக்கத்தில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர்களது மகள் அனு சேத்துப்பட்டு எம்சிசி பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் அனு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆவடி நீட் தேர்வு மையத்தில் நீட் தேர்வு எழுதியுள்ளார். முதன் முறையாக நீட் தேர்வு எழுதிய இவர், தோல்வி பயம் காரணமாக, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதையடுத்து 40 விழுக்காட்டுத் தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவியை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் சந்தித்து விசாரணை மேற்கொண்டு ஆறுதல் கூறினார். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பாக காணப்பட்டது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,008.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.