Show all

தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நிற்க முடியாது! அடாவடி காட்டிய இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஊழியர்கள். அதிர்ச்சியில் தமிழ்நாடு

தமிழ்நாடு அரசு உத்தரவை மீறி இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அருகே இருந்தவர்கள் தொடர்ந்து கேட்டும் எழுந்து நிற்க அடாவடியாக மறுத்துள்ளனர். 

14,தை,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அலுவலகத்தில் நடந்த குடியரசுத் நாள் விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது என்று இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஊழியர்கள் சிலர் அடாவடி காட்டிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. 

தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் கடந்த 02,மார்கழி (டிசம்பர் 17) அன்று உத்தரவு பிறப்பித்தார். மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் நடந்த சில அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை என்ற புகார்கள் கடந்த சில மாதங்களாக வைக்கப்பட்டு வந்தது. முதன்மையாக சென்னை இந்தியத் தொழில் நுட்ப நிறுவனத்தில் அண்மையில் நடந்த விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை என்று புகார் வைக்கப்பட்டது. 

தமிழ்- சமஸ்கிருத அகராதி வெளியீட்டு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்ததாக கூறப்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் வழக்கும் நடந்தது. இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், அறங்கூற்றுவர் ஜி.ஆர்.சுவாமிநாதன், தமிழ் தாய் வாழ்த்து பாடும் போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்தவித சட்டப்படியான, நிர்வாக அடிப்படையான உத்தரவு இல்லை என்று கூறினார். 

இந்த உத்தரவு பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் மாநில பாடலாக அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார். கட்டாயம் தமிழ்நாட்டில் அரசு நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். வாழ்த்து பாடும்போது மாற்றுத்திறனாளிகள் தவிர்த்த அனைவரும் எழுந்து நிற்க வேண்டும், பொது நிகழ்வுகளில் 'தமிழ்த்தாய் வாழ்த்து' இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாகப் பாடப்பட வேண்டும், என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

சென்னை இந்தியக்கட்டுப்பாட்டு அலுவலகத்தில் நடந்த குடியரசுத் நாள் விழாவில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க முடியாது என்று இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஊழியர்கள் சிலர் காட்டிய அடாவடி இந்த வகையில் சட்ட மீறல்ஆகும்.
 
தமிழ்நாடு அரசு உத்தரவை மீறி இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஊழியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அருகே இருந்தவர்கள் தொடர்ந்து கேட்டும் எழுந்து நிற்க அடாவடியாக மறுத்துள்ளனர். 

அங்கு இருந்தவர்கள் சிலர்- நீங்கள் ஏன் எழுந்து நிற்கவில்லை என்று கேட்டதற்கு, நாங்கள் ஏன் நிற்க வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்திற்கு நிற்க வேண்டாம் என உயர்அறங்கூற்றுமன்றம் தெரிவித்துள்ளது என்று புதிய சட்டத்திற்கு முந்தைய தீர்ப்பை மேற்கோள் காட்டியுள்ளனர். அதனால் நாங்கள் நிற்கவில்லை என்று கூறி கேள்வி எழுப்பியவர்களுடன் இவர்கள் வாக்குவாதம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு அரசின் உத்தரவை பற்றி அங்கு இருந்தவர்கள் பதில் அளித்துள்ளனர். ஆனால் அதை காதில் வாங்கிக்கொள்ளாமல் அங்கிருந்து இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி ஊழியர்கள் வெளியேறி உள்ளனர். 

இந்த அடாவடி நிகழ்வு தொடர்பாக காணொளியும் வெளியாகி சர்ச்சையாகி உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் குடியரசு நாள் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இந்தியக் கட்டுப்பாட்டு வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத பாடு பற்றி உரிய புகார் அளிக்கும் பட்சத்தில் அதில் நடவடிக்கை எடுப்போம் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. காணொளி ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழ்நாடு அரசு ஆணைப்படி விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,141.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.