Show all

வாடிக்கையாளர் தலைக்கு சந்தனம்! ஜியோவின் சில்லறை விலையில் தரவுத் திட்டம்: ரூபாய் ஒன்றுக்கு 100எம்பி

தங்கள் திட்டத்தில் களமிறங்கும் பாமரமக்களிடம் இருந்து, 1.34 ஜிபி தரவும் ஒரு நாளைக்கு எல்லையில்லாத அழைப்பும், நூறு சேதிகள் அனுப்பும் வாய்ப்பையும் மிச்சம் பிடிக்க- ஒரு ரூபாய் சில்லறை விலையில் தரவு வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கிறது ஜியோ.

29,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: வாடிக்கையாளர்கள் செரிமானம் செய்ய முடியாத அளவிற்கு விலையேற்றத்தை முன்னெடுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஜியோ தற்போது, பூசிமொழுகும் வகைக்கு சில்லறை விலையில் தரவு வழங்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.

தொடர்ந்து மற்ற மற்ற தொலைத் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் போட்டியைச் சமாளிக்க இதுபோன்ற பூசிமொழுகல்களைக் கட்டாயம் எடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

அதென்ன சில்லறை விலைத் தரவு என்று கேட்டால் அதாவது ரூபாய் ஒன்றுக்கே ஜியோவில் தரவு வாங்க முடியும் என்பதே அந்தச் செய்தி. 

இந்த திட்டமானது தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மொபைல் பயன்பாட்டில் தெரிந்தாலும் அதன் இணையதளத்தில் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ரூபாய் ஒன்றுக்கு பயனர்களுக்கு 30 நாட்கள் காலக்கெடுவோடு 100 எம்பி தரவு வழங்கப்படுமாம். இந்தப் பயன்பாட்டில் ஒரு ஜிபி தரவுக்கு பத்து ரூபாய் செலவாகும். 

பழைய 84 நாட்களுக்கான கட்டணத்திட்டத்தில் ரூ558க்கு நாளொன்றுக்கு இரண்டு ஜிபி தரவு வழங்கப்பட்டது. அதன்படிக்கு ரூபாய் 6.64க்கு இரண்டு ஜிபி தரவும் எல்லையில்லாத அழைப்பும், நூறு சேதி அனுப்பும் வாய்ப்பும் இருந்தது.

தற்போதைய நிலையில்- 84 நாட்களுக்கான கட்டணத்திட்டத்தில் ரூ719க்கு நாளொன்றுக்கு இரண்டு ஜிபி தரவு வழங்கப்படுகிறது. அதன்படிக்கு ரூபாய் 8.56க்கு இரண்டு ஜிபி தரவும் எல்லையில்லாத அழைப்பும், நூறு சேதி அனுப்பும் வாய்ப்பும் இருக்கிறது.

ஜியோவின் இந்தப் பூசிமொழுகல் சில்லறைத் திட்டத்தில் ரூபாய் பத்துக்கு 2.34 ஜிபி தரவும் ஒரு நாளைக்கு எல்லையில்லாத அழைப்பும், நூறு சேதிகள் அனுப்பும் வாய்ப்பும் தரமுடியும் மற்றும் தரப்படவேண்டும். 

ஆனால் ஜியோ இந்தப் புதிய பூசிமொழுகல் திட்டத்தில் 1.34 ஜிபி தரவும் ஒரு நாளைக்கு எல்லையில்லாத அழைப்பும், நூறு சேதிகள் அனுப்பும் வாய்ப்பையும் மிச்சம் பிடிக்கிறது. இந்த இலாபத்தை ஒரு ரூபாய் திட்டத்தில் களமிறங்கும் பாமரமக்கள் ஜியோவுக்கு வழங்கப் போகின்றார்கள்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,098. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.