Show all

சாலமன் பாப்பையாவின் மகிழ்ச்சியும் வருத்தமும்! எனக்கு ஒரு விருது கொடுத்தார்கள் மகிழ்ச்சி. அனால் அதில் ஒரு எழுத்தும் புரியவில்லை

எனக்கு பத்மசிறீ விருது கொடுத்தார்கள். அந்த விருதில் என்ன எழுதி இருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது என பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா வருத்தம் தெரிவித்துள்ளார். 

04,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5124: பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா, தனக்கு பத்மசிறீ விருது கொடுத்தார்கள். நான் அதை வாங்கப் போயிருந்தேன். ஆனால், கொடுத்திருக்கக் கூடிய விருதில் என்ன இருக்கிறது என்று ஒரு எழுத்து கூட எனக்குத் தெரியாது. ஏனென்றால் அதில் எல்லாமே ஹிந்தியில்தான் இருக்கிறது. 

அதைப் பார்க்கும்போது இப்படித்தான் நாங்கள் தருவோம். அதை நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என வற்புறுத்தித் தருவது திணிப்பாகவே இருக்கிறது. நான் பத்மசிறீ விருதை வாங்கும்போதே ஏண்டா இப்படி ஆகிப்போச்சே நமக்கு எனத் தோன்றியது. 

ஏனென்றால் என்ன கொடுத்திருக்கிறார்கள் என்றே தெரியாமல் வாங்கி வந்திருக்கிறேன். இப்போது அது எங்கோ எட்டாத உயரத்தில் இருக்கிறது. விளங்காத ஒரு மொழியில் நமக்கு ஒரு விருது கொடுத்திருக்கிறார்கள். யாருக்கு அது பயன்படும்?  எனத் தெரிவித்துள்ளார் சாலமன் பாப்பையா. 

இங்கிருந்து வட மாநிலங்களுக்குச் சென்றுள்ள மக்கள் அங்கு சென்று, அந்த மொழிகளை கற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள். அங்கிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைப்புக்காக வருபவர்களும் தமிழ் கற்றுக் கொள்கிறார்கள். தேவைப்பட்டால் கற்றுக் கொள்ள வேண்டியதுதான். 

உலகம் முழுவதும் செல்வதற்கு ஆங்கிலமும், உள்ளூரில் பேச தமிழ் மொழியும் கற்றுக்கொள்வது கட்டாயம். மூன்றாவது மொழியாக ஏன் ஹிந்தியை கற்றுக்கொள்ள வேண்டும்? ஏற்கனவே ஆங்கிலத்தால் எல்லா மொழிகளுமே சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அதில் இதுவும் வந்து சேர்ந்தால், எங்கள் தாய்மொழி நிச்சயம் அடிபட்டுப்போகும். உயிரைக் கொடுத்தாவது தாய்மொழியைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று தெரிவித்தார் சாலமன் பாப்பையா. 

அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட இருபத்தி இரண்டு மொழிகள் பேசும் மக்களின் நாட்டில் ஒரு மொழிக்கு அதிக நிதி ஒதுக்குவது இந்திய ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல. இது மாற்றாந்தாய் மனப்பான்மை. ஒன்றிய அரசு எல்லா மொழிகளுக்கும் சமமான முதன்மைத்துவம் தர வேண்டும். 

தன் மொழி தெரிந்தவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் சரி எல்லோருக்கும் ஒரேமாதிரியாக நடந்துகொள்ள வேண்டும். எல்லோரையும் தாயாகப் பார்க்க வேண்டும். சிலரை மட்டும் பேயாகப் பார்க்கக்கூடாது. ஒன்றிய அரசின் கவனம் இந்திய மொழிகளை வளர்ப்பதில் இல்லை. அவர்களின் கவனம் எல்லாம் ஹிந்தியும், சமஸ்கிருதமும் மட்டும்தான். இந்த இரண்டு மொழிகளை வைத்து நாடு முழுவதும் உள்ள மற்ற மொழிகளை அழித்துவிட நினைக்கிறார்களோ என்ற அச்சமும் வருகிறது. 

நாம் சென்ற நூற்றாண்டில் இருந்தே இந்த அடாவடியை எதிர்த்து வருகிறோம். பிற மாநிலங்களிலும் இப்போது விழிப்புணர்வு எழுந்து வருகிறது. அது எதிர்கால இந்திய ஒருமைப்பாட்டிற்கான நன்னிமித்தம் என சாலமன் பாப்பையா தெரிவித்துள்ளார்.
தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,252. 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.