Show all

அதிர்ச்சியில் மக்கள்! இருபத்தைந்து விழுக்காடு உயருகிறது, செல்பேசிகளுக்கு மீள்நிரப்புக் கட்டணம்

மக்களுக்குப் பேரதிர்ச்சியாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும், இரண்டாவது முறையாகச் செல்பேசிகளுக்கான மீள்நிரப்புக் கட்டணங்களைப் பேரளவாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 

07,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் விலை- வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்ட சமையல் எரிவாயுவிலை. அதேபோது, ரூபாய் முன்னூறு வரை இருந்த மானியம் பலருக்கு சுழியமாகவும், சிலருக்கு வெறுமனே ரூபாய் 24.95 அளிக்கிற வகையில் மக்கள் அதிர்ச்சியில் தள்ளாடி வருகின்றனர். 
இப்போது பேரதிர்ச்சியாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஆகிய மூன்று நிறுவனங்களும், செல்பேசிகளுக்கான மீள்நிரப்புக் கட்டணங்களை  உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளன. 

ஒரு குடும்பத்தில் மிகக் குறைந்த பட்சம் நான்கு செல்பேசிகள் உள்ள நிலையில்- வீட்டு வாடகை செலவு, மின்சார செலவு, எரிவாயு செலவு, பெட்ரோல் செலவு போல, செல்பேசி செலவும் பெரிய வகை செலவாக மாறிவிட்டது.  

ஏர்டெல் நிறுவனம் வெள்ளிக் கிழமை முதல் செல்பேசிகளுக்கான மீள்நிரப்புக் கட்டணத்தை  உயர்த்த உள்ள நிலையில் வோடபோனும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்தக் கட்டண உயர்வு நாளை மறுநாள் முதல் நடைமுறைக்கு  வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவை வழங்குவதில் ஏர்டெல், வோடபோன், ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்கள் மட்டுமே களத்தில் உள்ள நிலையில், இவர்களுக்கு போட்டியாளர்கள் இவர்கள் மட்டுமே என்பதால் தங்கள் தேவைக்கேற்பே செல்பேசி சேவை கட்டணங்களை விருப்பம் போல உயர்த்திக் கொள்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில்தாம் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வருவாய் இழப்புகளை சமாளிக்க என்று தெரிவித்து சேவை கட்டணங்களை ஏறத்தாழ இரட்டிப்பு கட்டணம் என்று சொல்லுகிற வகைக்கு உயர்த்தியிருந்தது என்பது நினைவு கூரத்தக்கது. 
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,076.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.