Show all

பாஜக தலைவி புரந்தேஸ்வரிக்கு மக்கள் கேள்வி! சரக்குசேவைவரியில் இருக்கிற சமையல் எரிவாயுவுக்கு மீண்டும் சரக்குசேவைவரியா

சமையல் எரிவாயு சரக்குசேவைவரியில்தானே முன்னமே இருக்கிறது? என்று, சமையல் எரிவாயுவை சரக்கு சேவைவரியில் கொண்டுவர மாநிலங்கள் ஒத்துழைக்கக் கேட்டுள்ள பாஜக தலைவி புரந்தேஸ்வரியைக் கிண்டலடித்து இணையம் தீயாக்கப்பட்டு வருகிறது.

14,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: புதுச்சேரி, நூறடி சாலையில் உள்ள சுகன்யா கன்வென்சன் சென்டரில் நடந்த, பாஜக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் ஒன்றியப் பொதுச்செயலர் புரந்தேஸ்வரி, கலந்து கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் பாஜக கட்டமைப்பை ஆய்வு செய்ய வந்துள்ளேன். கட்சியை பலப்படுத்த அனைத்து நிர்வாகிகளும் உறுதி மொழி எடுத்துள்ளனர். பிறகட்சிகளை போல இல்லாமல், பாஜக தேர்தலில் வெற்றி பெற்று, மக்களுக்கு சேவை செய்து வருகிறது.


சரக்குசேவை வரிக்குள் பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயுவை கொண்டு வந்தால் அதன் விலையை கட்டுப்படுத்தலாம் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

அனைத்து மாநில நிதி அமைச்சர்களும் சரக்குசேவைவரிக் குழுவில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் சம்மதித்தால் மட்டுமே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு சேவைவரிக்குள் கொண்டு வந்து விலையை குறைக்க முடியும்.

பாஜக அல்லாத பிற மாநிலங்களிலும் பெட்ரோலை சரக்குசேவைவரி வரம்புக்குள் கொண்டுவர ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பேரறிமுகமாக வெளியான செய்தியை கோடிட்டு சமையல் எரிவாயு சரக்குசேவைவரியில் வந்து அது விலையுயர்ந்த வரலாற்றை சுட்டிக்காட்டியுள்ளனர் இணைய ஆர்வலர்கள்.

'தமிழ்நாட்டில் சமையல் எரிவாயு மீதான மதிப்புக்கூட்டு வரியை ஜெயலலிதா களைந்திருந்தார். இதனால் சென்னையில் ஒரு எரிவாயு உருளை ரூ.560-க்கு கொடுக்கப்பட்டு வந்தது. சரக்கு
சேவை வரி விதிப்பால் எரிவாயுவின் விலை ரூ.574.50 ஆக உயர்ந்துள்ளது.' 

இது நாளது 19,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5119  (03.07.2017) அன்று பேரறிமுகமாக செய்தித்தாள்களில் வெளியான செய்தியாகும் என்று தெரிவித்து சமையல் எரிவாயுவை சரக்குசேவை வரிக்குள் கொண்டுவரக் கேட்ட பாஜக ஒன்றியத் தலைவி புரந்தேஸ்வரியை மக்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,053.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.