Show all

அறியாமையா? அரசியலா! மோடி அறிந்திருக்கிற இந்திய வரலாற்றை வடஇந்திய அதிகாரிகள் அறியாதது

வீரமங்கை வேலுநாச்சியாரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். ஆங்கில அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. என்று பாராட்டுகிறார் பிறந்த நாளில் வேலுநாச்சியாரை மோடி. 

05,தை,தமிழ்த்தொடராண்டு-5123: வஉசியும், வேலுநாச்சியாரும் யாரென்று தெரியாது என்று கூறி, குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்கேற்க ஒப்பனை ஊர்தி நிராகரிக்கப்பட்டுள்ள பிழையானது, பெருத்த அதிர்ச்சியைக் கிளப்பி வருகிறது.

தென்மாநிலங்களில் பாஜக ஆளும் கர்நாடகாவை தவிர அனைத்து மாநில ஒப்பனை ஊர்திகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன. காரணம், வஉசி, வேலுநாச்சியார் போன்றவர்களை தங்களுக்கு தெரியாது என்கிறார்கள். மேலும் பேரறிமுகமான விடுதலைப் போராட்ட வீரர்களை மட்டுமே எதிர்பார்ப்பதாகவும் அதனால்தான் இத்தகைய தலைவர்களை தங்களுக்கு தெரியாது என்றும் சொல்லி இந்திய வரலாறு தெரிந்திராத வடஇந்திய அரசு அதிகாரிகள் விளக்கம் தந்துள்ளதாக தெரிகிறது. 

பாரதியாரை மட்டுமே தங்களுக்கு தெரிவதாகவும், வ.உ.சி, வேலுநாச்சியார் இவர்கள் எல்லாம் வடஇந்தியர்கள் தெரிந்து கொள்ளும் வகைக்கு பேரறிமுகமான விடுதலைப் போராட்ட வீரர்கள் இல்லை என்றும் ஒன்றிய அரசு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால்- கடந்த 19,மார்கழி (சனவரி 3) அன்று வேலுநாச்சியாரின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளுக்கு தலைமைஅமைச்சர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக ஒரு கீச்சும் பதிவிட்டிருந்தார். 

வீரமங்கை வேலுநாச்சியாரை நினைவு கூறுகிறேன். அவரது வீரமும் துணிச்சலும் எதிர்கால தலைமுறைக்கு எழுச்சியூட்டும். ஆங்கில அடக்குமுறையை எதிர்த்துப் போராடிய அவரின் ஆளுமை வியப்பிற்குரியது. மகளிர் சக்தியின் மகிமையை உணர்த்திய அவரை வணங்கி மகிழ்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். 

நாட்டின் தலைமைஅமைச்சரே வேலுநாச்சியார் யார் என்பதை அறிந்து வாழ்த்து தெரிவிக்கும்போது, அவரது தலைமையிலான ஒன்றிய அரசு, வேலுநாச்சியார் யார் என்றே தெரியாது என்று சொல்லி இருப்பது அதிர்ச்சியை தந்து வருகிறது.

மேலும்- வ.ஊ.சி, வேலு நாச்சியார் ஆகியோருக்காக ஒன்றிய அரசு ஏற்கனவே அஞ்சல் தலைகளை வெளியிட்டுள்ளது. இது எப்படி அதிகாரிகளுக்கு தெரியாமல் போகும் என்ற கேள்வி எழுகிறது. 

ஒன்றிய அரசின் ஒவ்வொரு திட்டங்களும், அறிவிப்புகளும் வெளிவரும்போது அதில் தொடர்ந்து தமிழ் மொழியும், தமிழ்நாட்டு மக்களும் புறக்கணிக்கப்பட்டே வருவதாக விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. 

தமிழ்நாட்டிற்கு வரும்போது மட்டும், தேவைக்கு ஏற்ப திருக்குறளையோ, சங்க இலக்கியப் பாடல்களையோ மேற்கோள்காட்டி பேசும் பாஜக தலைவர்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு என்று வரும்போது அதை கண்டுகொள்ளாமல் நாசூக்காக தவிர்ப்பதும் நடைமுறையாகி வருகிறது. 

தாய்மொழி, சமூக நீதி ஆகிய இரண்டிலும் தமிழ்நாட்டு அரசியலுடன் முற்றிலும் முரண்படுகிறது பாஜக. எல்லோரும் சமம் என்ற கோட்பாடு அவர்களுக்கு எப்போதும் ஒவ்வாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இந்தியா முழுவதும் காலூன்றிய பாஜகவால் தமிழகத்தில் நுழைய முடியாததற்கு காரணம் திராவிட இயக்கத்தின் சமூக நீதிக் கோட்பாடுதான் என்ற எரிச்சலும் உள்ளுக்குள் இருக்கவே செய்கிறது. 

அதன் வெளிப்படாக வேலுநாச்சியார், வஉசி ஒப்பனை ஊர்தி புறக்கணிப்பாக இருக்கலாம். என்று சமூக ஆர்வலர்கள் இந்த பிழை நடவடிக்கை குறித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,132.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.